

பிரிஸ்டல்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் இன்று இரவு 10 மணிக்கு நடைபெறுகிறது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தான நிலையில் மான்செஸ்டரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இதைத் தொடர்ந்து நாட்டிங்காமில் நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 202 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 11.4 ஓவர்களில் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மோசமான தோல்வியை சந்தித்தது. ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங் ஆகியோரது வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி சுருண்டிருந்தது. இவர்கள் கூட்டாக 7 விக்கெட்களை வேட்டையாடி இருந்தனர்.
இந்த தோல்வியால் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-2 என பின்தங்கி உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் 4-வது டி 20 போட்டியில் இன்று மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் இந்திய அணி தொடரை இழக்க நேரிடும். இதனால் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்குகிறது.
ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கு முடியாமல் தடுமாறி வருகிறது. அயர்லாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரை இழந்த இந்திய அணியின் தடுமாற்றம் தற்போது இங்கிலாந்திலும் தொடர்வது வேதனையாகி உள்ளது.
15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷிக்காக கடந்த இரு ஆட்டங்களிலும் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு இருந்தார். சூர்யவன்ஷி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இரு ஆட்டங்களிலும் அவசர கதியில் விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தார். எனினும் அணியில் உள்ள மற்ற வீரர்களை விட சூர்யவன்ஷி மோசமாக செயல்படவில்லை. இருப்பினும் பேட்டிங்கை வலுப்படுத்தும் வகையில் இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
நடுவரிசையில் இஷான் கிஷன், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் பின் வரிசையில் ஷிவம் துபேவும் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். இன்றைய ஆட்டத்தில் திலக் வர்மா நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. பேட்டிங் வரிசை தங்களது ஆட்டத்திறனைப் பல மடங்கு உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றால், பந்துவீச்சுத் துறையின் கதையும் அவ்வாறே உள்ளது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களின் செயல்திறன் மோசமான நிலையில் உள்ளது. வருண் சக்கரவர்த்தி இதுவரை 7 ஓவர்கள் வீசி ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
இதற்கு நேர்மாறாக, ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இதுபோன்ற எந்தக் கவலைகளும் இல்லை. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதில் அந்த அணி கவனம் செலுத்தக்கூடும. கடந்த ஆட்டத்தில் 44 பந்துகளில் 70 ரன்கள் விளாசி பில் சால்ட் ஃபார்முக்குத் திரும்பி இருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங் கூட்டணி மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால்தரக்கூடும்.