

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-வது பதிப்பு வேளச்சேரியில் நடைபெற்று வருகிறது. தொடரின் 2-வது நாளான நேற்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹான்ஸ் நீமன், இந்திய கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரினுடன் மோதினார். ஹான்ஸ் நீமன் வெள்ளை காய்களுடனும், நிஹால் சரின் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். இந்த ஆட்டம் 132-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளி வழங்கப்பட்டது.
உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஜாவை எதிர்த்து விளையாடினார். இதில் அலிரேசா பிஃரோஜா வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். பரபரப்பாக நடைபெற்ற இந்த மோதலில் 69-வது நகர்த்தலின் போது அலிரேசா ஃபிரோஜா, குகேஷை வீழ்த்தினார். நடப்பு தொடரில் அலிரேசா ஃபிரோஜாவுக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் சுற்றில் அவர், எம்.பிரனேஷை தோற்கடித்து இருந்தார்.
ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான டிமிட்ரி ஆண்ட்ரெய்கின், இந்திய கிராண்ட் மாஸ்டரான எம்.பிரனேஷுடன் மோதினார். இந்த ஆட்டம் 18-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டரான நோதிர்பெக் அப்துசத்தோரோவ், இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியுடன் மோதினார். இந்த ஆட்டம் 43-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.