கேப்டன்சி ‘சேஞ்ச்’ - ரோஹித், ரிக்கிள்டன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

கேப்டன்சி ‘சேஞ்ச்’ - ரோஹித், ரிக்கிள்டன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
Updated on
1 min read

ஹர்திக் பாண்டியா உடல்நலமின்மை என்று கூறப்படுவதன் காரணமாக நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவ் கேப்டன்சிப் பொறுப்பை ஏற்றார். லக்னோவின் 228 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் 18.4 ஓவர்களில் அனாயசமாகக் கடந்து, 229 ரன்கள் என்று அபார வெற்றி பெற்றது.

நேற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் தோற்று விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது, காரணம் நிகோலஸ் பூரன் 21 பந்துகளில் 63 ரன்களை விளாசிய போது மும்பை அணி கையைப் பிசைந்து கொண்டு நின்றது. அப்படியே விட்டிருந்தால் லக்னோ 250 ரன்களை எடுத்திருக்கும்.

ஆனால் பவுலிங்கில் மும்பை இந்தியன்ஸ் டைட் ஆக்கி கடைசி 3 ஓவர்களில் ஒரு பவுண்டரியை மட்டுமே கொடுத்ததில் லக்னோ ஸ்கோர் 229 ஆக மட்டுப்படுத்தப்பட்டது. காயத்திலிருந்து மீண்டு திரும்பிய ஹிட் மேன் ரோஹித் சர்மா, ரியான் ரிக்கிள்டன் தொடக்க ஜோடி 11 ஓவர்களில் 143 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் கொடுத்தது. ரோஹித் சர்மா 44 பந்துகளில் 6 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 84 ரன்களையும் ரியான் ரிக்கிள்டன் 32 பந்துகளில் 6 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 83 ரன்களையும் விளாசினர்.

இந்த சேசிங்தான் வான்கடேவில் அதிகபட்ச ஸ்கோர் சேசிங் ஆகும். கடந்த போட்டியில் இதே மைதானத்தில் சன்ரைசர்ஸுக்கு எதிராக 123 ரன்களை விளாசிய ரிக்கிள்டன் நேற்று வெளுத்துக்கட்டி விட்டார். ரோஹித் சர்மா ஆட்டமிழக்கும் போதே மும்பை இந்தியன்ஸ் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவுகரிய நிலையை எட்டியிருந்தது.

கடைசியில் 3 தொடர் தோல்விகளுக்குப் பிறகு மும்பை வென்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6வது தொடர் தோல்வியைச் சந்தித்தது.

ரிஷப் பண்ட்டின் தொடரும் கஷ்ட காலம்: பேட்டிங்கில் தட்டுத் தடுமாறி வரும் ரிஷப் பண்ட், நேற்று இறங்கியதும் ரன் எடுக்கும் முன்னரே லைஃப் பெற்றார். ஆனால் அவர் இதைப்பயன்படுத்திக் கொள்ளாமல் 15 ரன்களில் வில் ஜாக்ஸ் பந்தில் ரிக்கிள்டனிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

கேப்டன்சியும் ரிஷப் பண்ட்டிற்கு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. நேற்று மிட்செல் மார்ஷ் (44), நிகோலஸ் பூரன் (63) இணைந்து 2வது விக்கெட்டுக்காக 94 ரன்களாலும் பின்னால் மார்க்ரம், ஹிம்மத் சிங்கின் அதிரடியினாலும் 228 ரன்களைச் சேர்த்தது. ஆனால் இதுவும் போதவில்லை. லக்னோவின் ஷமி 4 ஓவர் 53 ரன்களையும் மோசின் கான் 4 ஓவர் 47 ரன்களையும் ஆவேஷ் கான் 3.4 ஓவர்களில் 56 ரன்களையும் விட்டுக் கொடுத்ததில் மும்பையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ரிஷப் பண்ட்டினால் தொடர் தோல்வியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆட்ட நாயகன் ரியான் ரிக்கிள்டன்.

கேப்டன்சி ‘சேஞ்ச்’ - ரோஹித், ரிக்கிள்டன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
“தமிழக வாக்காளர்களின் புதிய பரிசோதனை முயற்சி இது...” - பிரதமர் மோடி கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in