நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கேப் வெர்டே: வெளியேறியது உருகுவே | FIFA WC - Match Momentum

பிரான்ஸ், செனகல் கோல் மழை
கேப் வெர்டே அணி வீரர்கள்

கேப் வெர்டே அணி வீரர்கள்

Updated on
2 min read

நியூயார்க்: நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக்-அவுட் சுற்றுக்கு கேப் வெர்டே அணி முன்னேறி வரலாறு படைத்துள்ளது. மறுமுனையில் இரண்டு முறை சாம்பியனான உருகுவே அணி குரூப் சுற்றோடு வெளியேறி உள்ளது.

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை தொடர் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு இதுவரை 26 அணிகள் முன்னேறி உள்ளன. இன்னும் 6 அணிகள் மட்டுமே இந்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டி உள்ளது.

நார்வே vs பிரான்ஸ்

அமெரிக்காவின் பாஸ்டனில் இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற குரூப்-ஐ பிரிவு ஆட்டத்தில் நார்வே மற்றும் பிரான்ஸ் அணிகள் விளையாடின. இதில் கால்பந்து ரசிகர்கள், பார்வையாளர்கள், ஆர்வலர்கள் என அனைவரது கவனமும் பிரான்ஸின் எம்பாப்பே, நார்வே அணியின் எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் மீது இருந்தது. ஏனெனில், இருவரும் இந்த தொடரில் அதிக கோல்கள் பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் உள்ளனர். அதனால் அவர்கள் மீது எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இந்த சூழலில் ஹாலண்ட் ஆட்டத்தின் தொடக்க லெவனில் இடம்பெறவில்லை.

ஆனால், ஆட்டத்தில் நடந்ததோ வேறு. பிரான்ஸின் உஸ்​மான் டெம்​பலே ஹாட்ரிக் கோல் பதிவு செய்தார். இதன் மூலம் பிரான்ஸ் அணிக்காக உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் கோல் பதிவு செய்த மூன்றாவது வீரர் ஆனார் உஸ்​மான் டெம்​பலே. ஆட்டம் தொடங்கி முதல் 32 நிமிடங்களுக்குள் இந்த மூன்று கோல்களையும் அவர் பதிவு செய்திருந்தார்.

21-வது நிமிடத்தில் நார்வே அணியின் ஆஸ்கார்ட் கோல் பதிவு செய்தார். அதன் பின் அந்த அணி கோல் பதிவு செய்யவில்லை. ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் பதிவு செய்தார் பிரான்சின் துவே. இதன் மூலம் பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சக அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய எம்பாப்பே அஸிஸ்ட் செய்து உதவினார். ரவுண்ட் ஆப் 32 சுற்றில் பிரான்ஸ் அணி, ஸ்வீடனை எதிர்கொள்கிறது. நார்வே அணி, ஐவரி கோஸ்ட் உடன் விளையாடுகிறது.

செனகல் vs ஈராக்

இதே குரூப்-ஐ பிரிவில் இடம்பெற்றுள்ள செனகல் மற்றும் ஈராக் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கனடாவின் டொராண்டோவில் நடைபெற்றது. இதில் 5-0 என்ற கணக்கில் கோல் பதிவு செய்து வெற்றி பெற்றது செனகல் அணி. இருப்பினும் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் ஆட்டங்களின் முடிவை பொறுத்தே குரூப்-ஐ பிரிவில் மூன்றாம் இடம் பிடித்துள்ள செனகல் அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அமையும்.

ஸ்பெயின் vs உருகுவே

மெக்சிகோவில் நடைபெற்ற குரூப்-ஹெச் பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் உருகுவே அணிகள் விளையாடின. இந்த தொடரில் கேப் வெர்டே மற்றும் சவுதி அரேபியா அணி உடனான ஆட்டத்தை சமன் செய்திருந்தது உருகுவே. அதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் சூழல் அந்த அணிக்கு இருந்தது. குறைந்தபட்சம் டிரா செய்தால் மற்ற பிரிவுகளில் உள்ள அணிகளின் ஆட்ட முடிவை பொறுத்து உருகுவே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.

இத்தகைய சூழலில் 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. அந்த அணிக்காக ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் அலெக்ஸ் கோல் பதிவு செய்தார். அதற்கான பதில் கோலை உருகுவே அணியால் பதிவு செய்ய முடியவில்லை. முடிவில் அந்த அணி தோல்வியடைந்து, நடப்பு தொடரில் இருந்து முதல் சுற்றோடு வெளியேறியது.

கேப் வெர்டே vs சவுதி அரேபியா

குரூப்-ஹெச் பிரிவில் இடம்பிடித்த கேப் வெர்டே அணி முதல் முறையாக ஃபிபா உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது. ஸ்பெயின் உடன் 0-0 என டிரா, உருகுவே உடன் 2-2 என்ற கோல் கணக்கிலும் டிரா செய்து அசத்தியது அந்த அணி. இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் சவுதி அரேபியா அணி உடனும் டிரா செய்தது. இதன் மூலம் இந்த பிரிவில் 3 ஆட்டங்களையும் டிரா செய்து, 3 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. வரும் ஜூலை 3-ம் தேதி அன்று மியாமியில் நடப்பு உலக சாம்பியன் அர்ஜெண்டினாவை ரவுண்ட் ஆப் 32 சுற்றில் கேப் வெர்டே எதிர்கொள்கிறது.

<div class="paragraphs"><p>கேப் வெர்டே அணி வீரர்கள்</p></div>
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமனம் - வலுக்கும் எதிர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in