

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின் மூளைக்காய்ச்சல் அல்லது மூளையுறை அழற்சி நோய் (meningitis) நோயில் சிக்கி மீண்ட கதையையும், அதன் பயங்கரத்தையும் நினைவுகூர்ந்துள்ளார்.
இப்போது டேமியன் மார்ட்டினுக்கு வயது 55. மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளில் ஏற்படும் அழற்சி அல்லது வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் வெகுஜன மொழியில் மூளைக்காய்ச்சல் என்று மூளை அழற்சி என்றும் கூறப்படுகிறது. சிகிச்சைக்குச் செல்லும்போது மருத்துவர்கள் இவர் பிழைப்பதற்கு 50 சதவீத வாய்ப்புதான் என்று கூறிவிட்டார்கள்.
பாக்சிங் டே என்று கொண்டாடப்படும் நாளில் டிசம்பர் 26, 2025 அன்று டேமியன் மார்ட்டின் தனது கோல்ட் கோஸ்ட் வீட்டில் மிகக் கடுமையாக மூளைக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் மருத்துவ ரீதியான செயற்கைக் கோமாவுக்கு ஆட்படுத்தப்பட்டார். 8 நாட்கள் கோமாவில் இருந்தார் மார்ட்டின், அப்போது 50% தான் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 2026 ஜனவரியில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அதன் பிறகும் தொடர் மருந்துச் சிகிச்சையில்தான் இருந்து வந்தார். இந்நிலையில்தான் இம்மாதம் அவர் தான் 90% குணமடைந்ததாகத் தன் ஆரோக்கிய நிலவரத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திய நிலையில், மனைவி அமண்டா மற்றும் மகன் ரைடர் ஆகியோர் அவருக்குப் பக்கபலமாக இருந்தனர்.
சிகிச்சைக்குப் பிறகு படிப்படியாகக் குணமடைந்த அவர், சுமார் 11 மாதங்களுக்குப் பிறகு கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - இங்கிலாந்து டி20 போட்டியின்போது தனது முன்னாள் சக வீரரும் நெருங்கிய நண்பருமான ஆடம் கில்கிறிஸ்ட்டைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மூளைக்காய்ச்சல் பாதிப்பு எதிர்பாராதவிதமாக ஏற்பட்டது. எட்டு நாட்கள் செயற்கை கோமாவில் இருந்தேன்.
எனது குடும்பத்தினர் என்னைவிட அதிகமான துயரத்தைச் சந்தித்தனர். எனது மகன் என் சிகிச்சை முடிந்து கூறியதுதான் என்னால் மறக்க முடியாதது, ‘அப்பா நீங்கள் என்ன செய்து விட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். கிரிக்கெட்டில் பிரபலமானதை விட மூளைக்காய்ச்சலால் பிரபலமாகிவிட்டீர்கள்.’ என்றான்.
கிரிக்கெட் சமூகத்தினரும், ஆஸ்திரேலிய மக்களும் எனக்கு அளித்த அன்பும் ஆதரவும் மனதளவில் உற்சாகமளித்து, விரைவாக மருத்துவமனையிலிருந்து மீண்டு வர வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தின. தற்போது 90 சதவீதம் குணமடைந்துள்ளேன். ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அடுத்த ஆண்டு மாரத்தான் போட்டியில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
1992 முதல் 2006 வரை ஆஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மார்ட்டின், 46.37 சராசரியில் 4,406 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 13 சதங்களும் அடங்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் 2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. மிகப்பிரமாதமான பேட்டரான டேமியன் மார்ட்டின் பேட்டிங்கை நம் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மண் பேட்டிங் ஸ்டைலுடன் ஒப்பிடலாம்.