

இந்திய அணியில் மூன்று வடிவங்களிலும் ஆடும் திறமையும் பொறுமையும், உடற்தகுதியும் இருந்தும் தொடர்ந்து கிரிக்கெட் அல்லாத காரணங்களுக்காக புறக்கணிக்கப்பட்டு வருபவர் சர்பராஸ் கான். ஆனால் தன் உறுதியில் சற்றும் மனம் தளராத சர்பராஸ் கான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று தத்துவார்த்தமாக பதிலளித்துள்ளார்.
மனம் தளராமல் தன் பாதையில் பயணித்து வருகிறார் மும்பை ரஞ்சி நட்சத்திரம் சர்ஃபராஸ் கான். கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்கள் வெளிப்படுத்தியிருந்தாலும், தேசிய அணித் தேர்வில் அவருக்கு தெளிவான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. இருந்தாலும், அதையே சுமையாக மாற்றாமல் தன் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
டெல்லிக்கு எதிரான மும்பையின் கடைசி லீக் ரஞ்சி போட்டிக்கு முன் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, சர்ஃபராஸ் மிக வேகத்துடன் தத்துவார்த்த நடுநிலையுடனும் மன ஓர்மையுடனும் பதிலளித்தார்.
“நான் இந்தக் கணம் என்ற நிகழ்காலத்தில் வாழ்பவன். கடந்த காலத்தை மாற்ற முடியாது. நாளை என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. இன்றைக்கு நான் வீட்டுக்குப் போய் பேட்டிங் பயிற்சி செய்வேன், அப்பாவுடன் நேரம் செலவிடுவேன், ஹோட்டலில் தூங்குவேன், நாளை போட்டியில் ஆடுவேன். எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவில்லை. நான் பல வருடங்களாக செய்து வருவதையே தொடர்ந்து செய்வேன்.
நான் என் வெள்ளைப்பந்து ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கிறேன். இந்தியாவுக்காக அந்த வடிவத்தில் விளையாட வேண்டும் என்பதே என் ஆசை. என் சகோதரன் முஷீருடன் நான் விளையாடுகிறேன். அவனது பேட்டிங்கும் பவுலிங்கும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறது. அவனுக்கு அது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஒருநாள் அவன் இந்திய அணியின் கேப்டனாவான். அவன் இளம் வயதிலேயே மூன்று வடிவங்களையும் ஆடுகிறான்.
நான் விளையாடும் போது என்னால் பவுலிங் செய்ய முடியாததால் அப்பா சில நேரங்களில் சோகமாக வீட்டுக்குப் போவார். ஆனால் முஷீர் வந்ததிலிருந்து, பேட்டிங்கில் அவன் அவுட் ஆனால் பந்து வீசுவான் என்றும் பவுலிங்கில் விக்கெட் எடுக்கவில்லை என்றால் பேட்டிங்கில் ரன் எடுப்பான் என்றும் அப்பாவுக்கு நம்பிக்கை இருக்கிறது.
இந்த தலைமுறையின் லெஜெண்ட்களுடன் விளையாட வேண்டும் என்பது என் கனவு. ஆர்சிபியில் விராட் கோலியுடன் விளையாடினேன். ரோஹித் உடன் டெஸ்ட் அணியில் விளையாடுவேன் என்று நினைக்கவே இல்லை, ஆனால் அது நடந்தது.
தோனியுடன் விளையாடுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதுவும் அவர் ஓய்வு பெற்ற பிறகு ஆடுவேன் என்று நினைக்கவில்லை. ஐபிஎலில் விற்பனையாகாமல் இருந்த என்னை சிஎஸ்கே எடுத்தது, இதனாலேயே நான் என்னை மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன்.” இவ்வாறு மனம் திறந்தார் சர்பராஸ் கான்.