மறக்க வேண்டிய டெஸ்ட்: 61 பந்துகளில் முடிந்தே போன டெஸ்ட் - உயிர்ப்பலி அச்சுறுத்தல் பிட்ச்!

மறக்க வேண்டிய டெஸ்ட்: 61 பந்துகளில் முடிந்தே போன டெஸ்ட் - உயிர்ப்பலி அச்சுறுத்தல் பிட்ச்!
Updated on
1 min read

டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றிலேயே 61 பந்துகளிலேயே ஒரு டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்தது என்றால் அது 1998-ம் ஆண்டு ஜனவரி 29 கிங்ஸ்டன் சபைனா பார்க்கில் இங்கிலாந்துக்கும் மே.இ.தீவுகளுக்கும் நடந்த முதல் டெஸ்ட் போட்டிதான்.

10.1 ஓவர்களில் இங்கிலாந்து 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் பிட்ச் அதிபயங்கரமான ஒன்றாக இருப்பதைக் கண்ட நடுவர்கள் ஸ்ரீனிவாச வெங்கட்ராகவனும் ஸ்டீவ் பக்னரும் ஆட்ட நடுவருடன் கலந்தாலோசித்து டெஸ்ட்டைக் கைவிட்டனர்.

“அவலம், நம்ப முடியாதது, கேலிக்கூத்து, முன்னெப்போதும் இல்லாதது, நம்பகத்தன்மையற்றது, ஆபத்தானது, முற்றிலும் அவமானகரமானது, கேலிக்கூத்து”- போன்ற தமிழ்ச்சொற்களின் ஆங்கில இணைகள் மறுநாள் அனைத்து ஆங்கில ஊடகங்களிலும் தலைப்பில் இடம்பெற்று பிரபலமாகின.

இது கிரிக்கெட்டுக்கே அவமதிப்பு, கரீபியன் கிரிக்கெட் பாரம்பரியத்தின் இழுக்கு என்றெல்லாம் ஆங்கில ஊடகங்கள் எழுதின. பிட்சில் அபாயகரமான இடத்தில் ஒரு பெரிய பிளவு அதை மைதான ஊழியர்கள் அடைக்கும் முயற்சியில் படுதோல்வி கண்டனர்.

இங்கிலாந்து கேப்டன் ஆத்தர்டன், பார்க்கும் போது இருக்கும் பிட்ச் விளையாடும் போது அவ்வளவு மோசமாக இருக்காது என்று டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 10 ஓவர்களுக்குள் 6 முறை இங்கிலாந்து அணியின் உடற்கூறு மருத்துவர் மைதானத்திற்கு வந்து இங்கிலாந்து பேட்டர்களின் காயங்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டியதாயிற்று.

ஆம்புரோஸ், கார்ட்னி வால்ஷ் பந்துகள் குட் லெந்தில் பிட்ச் ஆகி விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் எழும்பின, ஒரு சில பந்துகள் அதே லெந்த்தில் பிட்ச் ஆகி கணுக்காலுக்குக் கீழ் சென்றன. முற்றிலும் ஆட முடியாத பிட்ச். இது புதிதாக போடப்பட்ட பிட்ச் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேட்டர்களின் நெஞ்சு, தாவாங்கட்டை, விரல்கள் பின் மண்டை என்று பந்துகள் தாக்கிக் கொண்டிருந்தன. மே.தீவுகளில் அப்போதுதான் பிரையன் லாரா கேப்டனாகியிருந்தார். மேட்ச் முடித்து வைக்கப்பட்டது.

பெவிலியனில் அமர்ந்திருந்த ஆடம் ஹோலியோக் மற்றும் பிற முன்னாள் வீரர்கள் இன்று களபலி உண்டு என்று அச்சத்துடன் தாங்கள் நினைத்ததை ஆட்டம் கைவிடப்பட்டு ஊடகத்தாரிடம் பகிர்ந்து கொண்டனர். போத்தம் அன்று கூறிய போது, “யாரோ ஒருவர் இன்று கொல்லப்படுவார் என்று நான் பயந்தேன்.” என்றார்.

121 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பிட்ச் ஆடுவதற்கு ஏற்றதல்ல, அபாயகரமானது, வீரர்கள் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தானது என்று கைவிடப்பட்டது இதுவே முதல் முறை.

மைக்கேல் ஹோல்டிங் இந்தப் பிட்ச் பற்றிக் கூறுகையில், “இது போன்ற அபாயகரமான பிட்சை நான் இது வரை கண்டதில்லை, இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” என்றார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்றைய தினம் ஒரு கருப்புத் தினமாகவே கிரிக்கெட் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

மறக்க வேண்டிய டெஸ்ட்: 61 பந்துகளில் முடிந்தே போன டெஸ்ட் - உயிர்ப்பலி அச்சுறுத்தல் பிட்ச்!
ஐசிசி டி20 தரவரிசை​யில் சூரியகுமார் யாதவுக்கு 7-வது இடம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in