

மெல்பர்ன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட இந்த பாரம்பரியமிக்க தொடரில் முதல் 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில் 4-வது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் வரும் 26ம் தேதி மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் கேப்டன் பாட் கம்மின்ஸ், நேதன் லயன் ஆகியோர் விலகி உள்ளனர். நேதன் லயன், 3-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் பீல்டிங்கின் போது பவுண்டரியை நோக்கி சென்ற பந்தை தடுத்த போது தொடை பகுதியில் காயம் அடைந்தார். இதனால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
அதேவேளையில் ஆஷஸ் தொடரை வென்றுவிட்டதால் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் பாட் கம்மின்ஸுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதில் இருந்து அவர், மீண்டுவர அதிக காலம் ஆனது. இதன் காரணமாக ஆஷஸ் தொடரின் முதல் 2 போட்டிகளில் கம்மின்ஸ் பங்கேற்கவில்லை.
அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கம்மின்ஸுக்கு ஆஷஸ் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறியுள்ளார். கம்மின்ஸுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர், 4 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பி உள்ளார். நேதன் லயனுக்கு பதிலாக பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் டாட்மர்பி சேர்க்கப்பட்டுள்ளார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக 3-வது டெஸ்ட் போட்டியில் கடைசி நேரத்தில் விலகியிருந்த ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்டு, மார்னஷ் லபுஷேன், உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஷ், கேமரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர், டாட் மர்பி, மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், பிரண்டன் டாகெட், மைக்கேல் நேசர், ரிச்சர்ட்சன்.