

புதுடெல்லி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், இந்த தொடருக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் களமிறங்கி உள்ளனர்.
இந்த வகையில், 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் 20 சாத்தியமான வீரர்கள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் செயல் திறன்களை வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரின் போது, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் கூர்ந்து கவனிப்பார்கள் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்வுக்குழுவில் எஸ்.எஸ்.தாஸ், ஆர்.பி.சிங், அஜய் ராத்ரா, பிரக்யான் ஓஜா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் தொடரின் போது தேர்வுக் குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மைதானங்களுக்கு நேரில் சென்று போட்டிகளைக் கண்காணிப்பார்கள் என்றும், மற்ற போட்டிகளைத் தொலைக்காட்சியின் வாயிலாகக் கவனிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. அன்றைய தினம் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. அஜித் அகர்கர் மும்பையில் வசித்து வருகிறார். இதனால் அவர், அங்கு நடைபெறும் போட்டிகளை நேரில் பார்வையிடுவார்.
எஸ்.எஸ்.தாஸ் கொல்கத்தாவில் நடைபெறும் போட்டிகளையும், ஆர்.பி.சிங், விஜய் ராத்ரா ஆகியோர் டெல்லியில் நடைபெறும் போட்டிகளையும் பார்வையிடக்கூடும். பிரக்யான் ஓஜா பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டிகளை பார்வையிட உள்ளனர்.
பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு தேர்வாளரும் வாரத்துக்கு குறைந்தது ஒரு போட்டியையாவது நேரடியாக மைதானத்துக்கு சென்று பார்க்க வேண்டும் என்று பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வாரத்துக்கு ஐந்து போட்டிகள் மைதானத்திலிருந்து நேரடியாகக் கண்காணிக்கப்படும். மற்ற போட்டிகளை அவர்கள் வழக்கம்போலத் தொலைக்காட்சியின் வாயிலாகக் கண்காணிக்க முடியும்” என்றார்.