வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்க கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அதிரடி உத்தரவு!

வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்க கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அதிரடி உத்தரவு!
Updated on
1 min read

சமீபத்திய வங்கதேச அரசியல் சூழல்கள் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி 2026 ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியிலிருந்து வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ (BCCI) அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைக்கியா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அங்கு நிலவும் சமீபத்திய சூழல்களைக் கருத்தில் கொண்டு, முஸ்தபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கேகேஆர் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவருக்குப் பதிலாக வேறு ஒரு மாற்று வீரரை (Replacement) அவர்கள் கோரினால், அதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கும்" என்று கூறியுள்ளார்.

பின்னணி என்ன? - பிசிசிஐ இந்த முடிவுக்கான உறுதியான காரணத்தை வெளிப்படையாகக் கூறவில்லை. இருப்பினும், அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இதன் பின்னணியில், வங்கதேச வீரரை அணியில் சேர்த்ததற்காக கேகேஆர் அணி மற்றும் அதன் உரிமையாளர் ஷாருக்கான் மீது சில இந்திய ஆன்மிக மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்ததே இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், 9.2 கோடி ரூபாய்க்கு முஸ்தபிசுர் ரஹ்மானை கேகேஆர் வாங்கியிருந்தது. 2026 சீசனுக்காகத் தேர்வு செய்யப்பட்ட ஒரே வங்கதேச வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2016 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் முஸ்தபிசுர் இதுவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதுவரை 60 போட்டிகளில் 65 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த அறிவிப்பு வருவதற்கு ஒரு நாள் முன்னர்தான், மார்ச் 2026-ல் இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) அறிவித்திருந்தது. இப்போது இது குறித்தும் ஐயம் எழுந்து வருகிறது.

தற்போது வங்கதேச பிரீமியர் லீக்கில் (BPL) ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக முஸ்தபிசுர் விளையாடி வருகிறார். பிசிசிஐ-யின் இந்த திடீர் உத்தரவு குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் கேகேஆர் நிர்வாகம் விரைவில் தங்களது கருத்துக்ளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்க கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அதிரடி உத்தரவு!
பஞ்​சாப் அணிக்​காக இன்று களமிறங்​கு​கிறார் ஷுப்​மன் கில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in