

சட்டோகிராம்: வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று நடைபெற்றது.
முதலில் பேட் செய்த அயர்லாந்து 19.5 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் பால் ஸ்டிர்லிங் 38, ஜார்ஜ் டாக்ரெல் 19, டிம் டெக்டர் 17 ரன்கள் சேர்த்தனர். வங்கதேசம் அணி தரப்பில் முஸ்டாபிஸூர் ரஹ்மான், ரிஸாத் ஹோசைன் ஆகியோர் 3 விக்கெட்களை வீழ்த்தினர். பீல்டிங்கின் போது தன்ஸித் ஹசன் 5 கேட்ச்கள் எடுத்தார்.
சர்வதேச டி20 அரங்கில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியை சேர்ந்த வீரர் 5 கேட்ச்கள் செய்வது இதுவே முதன் முறையாகும். 118 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க வீரரான தன்ஸித் ஹசன் 36 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் விளாசினார். சைஃப் ஹசன் 19, பர்வேஷ் ஹோசைன் 33 ரன்கள் சேர்த்தனர். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.