

இபோ: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்று வருகிறது.
6 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்தத் தொடரில் இந்திய தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று கனடாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 14-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி சார்பில் ஜூக்ராஜ் சிங் 4 கோல்களும் ரஜிந்தர் சிங், அமித் ரோஹிதாஸ், அபிஷேக் ஆகியோர் தலா 2 கோல்களும் அடித்து அசத்தினர். தில்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, செல்வம் கார்த்தி, சஞ்ஜய் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்திய அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் இந்திய அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பெல்ஜியத்துடன் மோதுகிறது. பெல்ஜியம் அணி 4 வெற்றி, ஒரு டிராவுடன் தோல்வியை சந்திக்காமல் 13 புள்ளிகளுடன் லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்து இருந்தது.