

டர்பன்: தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றுவந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 390 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 284 ரன்களும் எடுத்தன. 106 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 421 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 41 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்திருந்தது. எய்டன் மார்க்ரம் 45, வியான் முல்டர் 5 ரன்களுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். வியான் முல்டர் 29 ரன்களில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து கைல் வெரைய்ன் 1, மார்கோ யான்சன் 34, சைமன் ஹார்மர் 0 ரன்களில் நடையை கட்டினர்.
தாக்குப்பிடித்து விளையாடிய எய்டன் மார்க்ரம் 237 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். கடைசி வீரராக அன்ரிச் நோர்க்கியா 4 ரன்களில் நடையை கட்ட தென் ஆப்பிரிக்க அணி 86.5 ஓவர்களில் 206 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 6, மேட் ரென்ஷா 2 விக்கெட்களை வீழ்த்தினர். மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 18-ம் தேதி கெபர்காவில் தொடங்குகிறது.
முதல் தோல்வி
டர்பன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 214 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்தது. கேப்டனாக தெம்பா பவுமாவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இது முதல் தோல்வியாக அமைந்தது. இதற்கு முன்னர் அவரது தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி 11 டெஸ்டில் வெற்றி பெற்றிருந்தது.