

சிட்னி: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடருடன் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி அறிவித்து உள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 ஆட்டங்கள், 3 ஒருநாள் போட்டி, ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடருடன் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் மட்டுமே அலிசா ஹீலி விளையாட உள்ளார். ஏனெனில் இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் டி 20 மகளிர் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதைத் கருத்தில் கொண்டு அலிசா ஹீலி, இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடவில்லை.
அலிசா ஹீலி தலைமையில் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி 6 முறை ஐசிசி டி 20 உலகக் கோப்பையையும், இரு முறை 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்திருந்தது.
கடந்த 2010-ம் ஆண்டு அலிசா ஹீலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருந்தார். விக்கெட் கீப்பர் பேட்டரான அலிசா ஹீலி ஆஸ்திரேலிய அணிக்காக 10 டெஸ்ட் போட்டி, 123 ஒருநாள் போட்டி, 162 டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 30.56 சராசரியுடன் 489 ரன்கள் சேர்த்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 35.98 சராசரியுடன் 3,563 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 சதங்களும் அடங்கும். டி20-ல் 25.45 சராசரியுடன் 3,054 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதமும் விளாசியுள்ளார்.