

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக எஸ்எஸ்ஐ மற்றும் 4 போலீஸார் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவன்(20). இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி உள்பட 9 வழக்குகள் உள்ளன. சென்னை காவல்துறையின் ரவுடிகள் பட்டியலில் ‘பி’ பிரிவில் வைக்கப்பட்டிருந்தார்.
ஆதிக்கும், ஆவடி ஏரிக்கரைப் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவருக்கும் முறையற்ற உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பெண்ணுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 18-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தை உடல்நலக்குறைவால் கடந்த 11-ம் தேதி இறந்தது. தகவலறிந்த ஆதி, துக்கம் விசாரிப்பதற்காக அன்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.
பின்னர் அங்கிருந்த வில்லிவாக்கம் பொன்னாங்கிணறு தெருவைச் சேர்ந்த தனது தோழி, மற்றும் சிலருடன் மதுபோதையில் பிரசவ வார்டின் எதிர்புறம் உள்ள தாழ்வாரப் பகுதியில் தூங்கினார்.
தொடர்ந்து விசாரணை: இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை அங்கு ஹெல்மெட் அணிந்தபடி வந்த கும்பல் ஆதியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இக்கொலை தொடர்பாக 8 பேரை கீழ்ப்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
போலீஸ் மற்றும் தனியார் காவலாளிகளையும் மீறி கொலையாளிகள் அரசு மருத்துவமனை உள்ளே நுழைந்து ரவுடியைக் கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பணியில் கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் செயல்பட்டதாக சிறப்பு எஸ்ஐ ஸ்ரீதரன், முதல்நிலை காவலர் நரேந்திரன், பெண் காவலர்கள் சரிதா, அம்பிகா, நீலாவதி ஆகிய 5 பேரை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.