இம்ரான் கானுக்கு சிகிச்சை: ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் ஆதரவு

இம்ரான் கான், கம்மின்ஸ்

இம்ரான் கான், கம்மின்ஸ்

Updated on
1 min read

சென்னை: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானுக்கு முறையான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்ய வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்களின் குரலுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சிறை தண்டனை அனுபவித்து வரும் இம்ரான் கானின் உடல்நலம் குறித்து சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கவலை கொண்டுள்ளனர். இது தொடர்பாக 21 முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்கு அண்மையில் கடிதம் எழுதி இருந்தனர்.

இம்ரான் கானின் உடல்நிலை குறித்து அறியும் வகையில் அவரது மகன்களான காசிம் மற்றும் சுலைமானை பேட்டி கண்டிருந்தார் மைக் ஆதர்டன். இது இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட மதிய இடைவேளையின் போது ஒளிபரப்பானதாக தகவல். இந்நிலையில், கம்மின்ஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

“இம்ரான் கானுக்காக குரல் கொடுத்து வரும் சர்வதேச அணிகளின் முன்னாள் கேப்டன்களுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். நீதிமன்றம் உத்தரவிட்டது போல அவருக்கு முழு மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை கிடைக்கவும், குடும்பத்தினர் அவரை தொடர்ந்து சந்திக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும். கண்ணியத்துடன் அவர் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்” என கம்மின்ஸ் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

சிறையில் இம்ரான் கான்

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், கடந்த 2018 முதல் 2022 வரை பிரதமராக பதவி வகித்தார். அவரது பதவிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2023 முதல் அவர் ராவல்பிண்டியில் உள்ள ஆதியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதை அடுத்து, இம்ரானை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதோடு அவரது குடும்பத்தினர் அவரை வாரந்தோறும் சந்திக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இம்ரான் கானுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டுமென பாகிஸ்தான் அரசை சர்வதேச கிரிக்கெட் அணிகளின் 21 முன்னாள் கேப்டன்கள் வலியுறுத்திய நிலையில் சர்வதேச அணியின் நிகழ்கால கேப்டனான கம்மின்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் அவரை தொடர்ந்து மேலும் பலர் இம்ரான் கானுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

<div class="paragraphs"><p>இம்ரான் கான், கம்மின்ஸ்</p></div>
WTC இறுதிக்கு இந்திய அணி முன்னேறும் வாய்ப்பு எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in