வெற்றியைக் கொண்டாடும் அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன்
‘குட் பை பாஸ்பால்’- சிட்னி டெஸ்ட்டில் இங்கிலாந்தை ஊதி ஆஷஸ் தொடரை 4-1 என்று வென்றது ஆஸ்திரேலியா
சிட்னி டெஸ்ட் போட்டியின் 5ம் நாளான இன்று இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்சில் 342 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கான 160 ரன்கள் இலக்கை 5 விக்கெட்டுகளை இழந்து எட்டி அபார வெற்றி பெற்றதோடு ஆஷஸ் கோப்பையை 4-1 என்று வென்றது ஆஸ்திரேலியா.
இங்கிலாந்து தரப்பில் இந்தத் தொடரின் ஒரே ஆறுதல் செய்தி ஜேக்கப் பெத்தல் என்ற அற்புதமான 22 வயது இடது கை பேட்டர் மற்றும் பயனுள்ள இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்னும் பொக்கிஷத்தைக் கண்டுபிடித்ததுதான். 142 ரன்களுடன் இன்று தொடங்கிய பெத்தல் 15 பவுண்டரிகளுடன் இன்று 154 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மிட்செல் ஸ்டார்க்கின் துல்லிய பந்தில் எட்ஜ் ஆகி கேரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜாஷ் டங்கையும் ஸ்டார்க் வீழ்த்த மேத்யூ பாட்ஸ் 18 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
இங்கிலாந்து 342 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் இங்கிலாந்தின் 2வது இன்னிங்ஸில் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் அதியற்புதமாக வீசி கமின்ஸ், ஹேசில்வுட் இல்லாத இடத்தை நிரப்பிய ஸ்காட் போலண்ட் 25 ஓவர்களில் வெறும் 46 ரன்களையே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றிய ஸ்பெல்கள் உண்மையில் இங்கிலாந்தின் புண்களில் உப்பைத் தடவியது என்றே கூற வேண்டும்.
ஆஸ்திரேலியா சேசிங் வெற்றி: 160 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இறங்கிய ஆஸ்திரேலியா அணி சிற்சில சிக்கல்களை எதிர்கொண்டாலும் 31.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வழக்கம் போல் இங்கிலாந்து ஷார்ட் பிட்ச் உத்தியைக் கடைப்பிடிக்க வெதரால்ட் (34), ட்ராவிஸ் ஹெட் (29) இணைந்து 10 ஓவர்களில் 62 என்று அதிரடி தொடக்கம் கொடுத்தனர். ஹெட், ஜாஷ் டங் பவுன்சரை புல் ஆட முயன்று கொடியேற்ற கார்ஸ் கேட்சைப் பிடித்தார். வெதரால்ட் அற்புதமான கவர் ட்ரைவ் கட் ஷாட்களுடன் ஒன்றிரண்டு ரிவர்ஸ் ஸ்வீப்களுடன் 5 பவுண்டரிகள் விளாசி டங்கின் பவுன்சரை ஏனோதானொவென்று தொட பைன்லெக்கில் பாட்ஸ் அட்டகாசமாக கேட்ச் பிடித்தார்.
ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஸ்பின்னர் வில் ஜாக்ஸ் இந்தத் தொடரில் ஏதாவது ஒன்றை அவர் நினைவு வைத்துக் கொள்ளலாம் என்றால் இந்தப் பந்தைதான் என்னும் அளவுக்கு ஒரு கிளாசிக் ஆஃப் ஸ்பின்னை வீசி பவுல்டு செய்தார். அத்தனை கேட்ச்களை விட்டு அசிங்க்மாக அவுட் ஆகிக் கொண்டிருந்த வில் ஜாக்ஸிற்கு இந்த ஸ்மித் விக்கெட் சில இனிய நினைவுகளைக் கொடுக்கலாம்.
தன் பிரியாவிடை இன்னிங்ஸில் இறங்கிய உஸ்மான் கவாஜா 6 ரன்களில் டங் பந்தை வாங்கி ஸ்டம்பிற்குள் விட்டுக் கொண்டு வெளியேறினார். கடைசி இன்னிங்ஸ். இனிமேல் வெள்ளைச்சீருடையில் அல்ல எந்த சீருடையிலுமே அவரை களத்தில் காண முடியாது. மார்னஸ் லபுஷேன் ஒரு சிக்சர் 4 பவுண்டரிகளுடன் அட்டகாசமாக ஆடி வந்தவர், அலெக்ஸ் கேரி எதிர்முனையில் இருக்க கையில் அடித்து விட்டு ஒரேயடியாக அரைமேட் கடந்து ஓடி வர ரன் அவுட் ஆகி கடுப்பாக வெளியேறினார். பிற்பாடு இன்று அலெக்ஸ் கேரி லபுஷேனுக்கு ஒரு பீர் வாங்கித் தர கடமைப்பட்டிருக்கிறார் என்றே கூற வேண்டும்.
கேரி 16, கிரீன் 22 என்று ஆஸ்திரேலியாவை வரலாற்று வெற்றிக்கு இட்டுச் சென்றனர். ஜேக்கப் பெத்தல் என்ற பொக்கிஷ கண்டுப்பிடிப்பு போல் இந்தத் தொடரில் ஜாஷ் டங் என்ற ஒரு நல்ல பவுலரையும் இங்கிலாந்து கண்டுணர்ந்துகொண்டுள்ளது. ஆட்ட நாயகன் - ட்ராவிஸ் ஹெட், தொடர் நாயகன் மிட்செல் ஸ்டார்க்.
கடந்த 15 ஆண்டுகளின் மோசமான ஆஸ்திரேலிய அணி என்றும், டாடீஸ் டீம் என்றும் இங்கிலாந்து முன்னாள்களால் கேலி பேசப்பட்டு, பாஸ்பால் பாஸ்பால் என்று உக்கிர முழக்கம் கொண்டு திமிரெடுத்துப் பேசிய இங்கிலாந்து கடைசியில் பாஸ்பால் செத்து மடிய இந்தத் தொடரில் ஆடிய சில இங்கிலாந்து வீரர்கள் இனி இங்கிலாந்துக்கு ஆட முடியாது போகும் என்ற நிலையிலும் பிரெண்டன் மெக்கல்லம், பென் ஸ்டோக்ஸ் கூட்டணி முடிவுக்கு வரும் என்ற நிலையிலும் படுதோல்வியுடன் ஊர் திரும்புகிறது.
