

மிர்பூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மிர்பூரில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 284 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மோசடக் ஹொசைன் 70 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசினார். நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 67, தன்ஸித் ஹசன் 67 ரன்கள் சேர்த்தனர்.
285 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 42.2 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. மேத்யூ ஷார்ட் 0, கூப்பர் கானொலி 35, மார்னஷ் லபுஷேன் 1, கேப்டன் ஜோஷ் இங்லிஷ் 19, அலெக்ஸ் கேரி 47, மேட் ரென்ஷா 2, லியாம் ஸ்காட் 2, சேவியர் பார்ட்லெட் 1, நேதன் எல்லிஸ் 8 ரன்களில் நடையை கட்டினர். வங்கதேசம் அணி சார்பில் நஹித் ராணா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
கேமரூன் கிரீன் 52, ஆடம் ஸாம்பா 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். மழை காரணமாக ஆட்டத்தை தொடர முடியாததால் வெற்றியை தீர்மானிக்க டக்வொர்த் லீவிஸ் விதிமுறை அமல்படுத்தப்பட்டது. இதில் வங்கதேச அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் வங்கதேச அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.