டெஸ்ட் தொடரை சமன் செய்தது ஆஸ்திரேலிய அணி: 2 நாட்களுக்குள் போட்டி முடிவடைந்தது

டெஸ்ட் தொடரை சமன் செய்தது ஆஸ்திரேலிய அணி: 2 நாட்களுக்குள் போட்டி முடிவடைந்தது
Updated on
2 min read

மெக்கே: வங்கதேச அணிக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றம் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 1-1 என சமன் செய்தது.

ஆஸ்திரேலியாவின் மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர்ஸ் ரீஃப் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 34 ஓவர்களில் 64 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக 11-வது வீரராக களமிறங்கிய ஷோரிபுல் இஸ்லாம் 14 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6, பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 40 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. கேமரூன் கிரீன் 51, நேதன் லயன் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 52.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கேமரூன் கிரீன் 105 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்த நிலையில் ஷோரிபுல் இஸ்லாம் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து ஜோஷ்ஹேசில்வுட் 6 ரன்களில் தைஜூல் இஸ்லாம் பந்தில் ஆட்டமிழந்தார். வங்கதேச அணி தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம் 15 ஓவர்களை வீசி 3 மெய்டன்களுடன் 48 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

146 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 38.3 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 46 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்தார். முஸ்பிகுர் ரஹிம் 80 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பேட் கம்மின்ஸ், நேதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை மிட்செல் ஸ்டார்க் பெற்றார். 2 போட்டியிலும் சேர்த்து அவர், 12 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்து கோப்பையை வங்கதேச அணியுடன் பகிர்ந்து கொண்டது.

இந்த போட்டி ஒட்டுமொத்தமாக 125 ஓவர்களில் 2 நாட்களுக்குள் முடிவடைந்தது. டார்வினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.டெஸ்ட் தொடருக்கான கோப்பை பகிர்ந்து கொண்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ.

டெஸ்ட் தொடரை சமன் செய்தது ஆஸ்திரேலிய அணி: 2 நாட்களுக்குள் போட்டி முடிவடைந்தது
நூலிழையில் தொங்கும் அரையிறுதி வாய்ப்பு: இந்தியா - அர்ஜெண்டினா இன்று பலப்பரீட்சை | Hockey WC

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in