

சிட்னி: இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் குவித்துள்ளது. டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசியுள்ளதால் அந்த அணி 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 4-ம் தேதி 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கியது. இந்தப் போட்டி பிங்க் பால் டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது.
முதலில் விளையாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 384 ரன்களில் ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 160 ரன்கள் குவித்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று 3-ம் நாள் ஆட்டத்தை டிராவிஸ் ஹெட் 91 ரன்களுடனும், மைக்கேல் நேசர் ஒரு ரன்னுடனும் தொடங்கினர். ஓரளவுக்குத் தாக்குப் பிடித்து விளையாடிய மைக்கேல் நேசர் 24 ரன்களில், பிரைடன் கார்ஸ் பந்துவீச்சில் ஜேமி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே டிராவிஸ் ஹெட் சிட்னி மைதானத்தில் தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார். மேலும் இந்தத் தொடரில் அவர் விளாசும் 3-வது சதமாகும் இது.
பின்னர் டிராவிஸ் ஹெட்டுடன் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித், இன்னிங்ஸை கட்டமைத்து ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஹெட் 166 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜேக்கப் பெத்தேல் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 166 பந்துகளில் 24 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் இந்த ஸ்கோரை எடுத்தார்.
அதன் பின்னர் வந்த உஸ்மான் கவாஜா 17, அலெக்ஸ் கேரி 16, கேமரூன் கிரீன் 37 ரன்கள் சேர்த்தனர். 8-வது விக்கெட்டுக்கு ஸ்டீவன் ஸ்மித்துடன் இணைந்த பியூ வெப்ஸ்டர் சிறப்பாக விளையாடி ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். இந்நிலையில் ஸ்டீவன் ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் தனது 37-வது சதத்தை விளாசினார்.
ஆட்ட நேர இறுதியில் ஸ்டீவன் ஸ்மித் 129 ரன்களுடனும், பியூ வெப்ஸ்டர் 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3, ஸ்டோக்ஸ் 2, ஜோஷ் டங், ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர். 124 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 518 ரன்களுடன் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸை விட 134 ரன்கள் முன்னிலை பெற்று அந்த அணி வலுவான ஸ்கோருடன் உள்ளது. இந்நிலையில் 4-ம் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி இன்று தொடர்ந்து விளையாட உள்ளது.
சிட்னியில் 5-வது சதம்: இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஸ்டீவன் ஸ்மித் சிட்னி மைதானத்தில் தனது 5-வது சதத்தைப் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் விளாசிய 37-வது சதமாகும் இது. சிட்னி மைதானத்தில் மட்டும் 13 போட்டிகளில் விளையாடி 72.05 சராசரியுடன் 1,225 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 5 சதங்களும் அடங்கும். மேலும், ஆஷஸ் தொடர்களில் மட்டும் அவர் 12 சதங்களை விளாசியுள்ளார்.
ஆஷஸ் தொடரில் அதிக ரன்கள்: ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் ஸ்டீவன் ஸ்மித் 2-ம் இடத்துக்கு வந்துள்ளார். அவர் 3,682 ரன்களுடன் 2-வது இடத்தைப் பெற்றுள்ளார். இந்த வரிசையில் முதலிடத்தில் டான் பிராட்மேனும்(5,028 ரன்கள்), 2-வது இடத்தில் ஸ்டீவன் ஸ்மித்தும் (3,682 ரன்கள்), 3-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஜேக் ஹாப்ஸும் (3,636 ரன்கள்), 4-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆலன் பார்டரும்(3,222 ரன்கள்), 5-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹ்ஹும் (3,173 ரன்கள்), 6-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் டேவிட் கோவரும் (3,037 ரன்கள்) உள்ளனர்.
டான் பிராட்மேன் சாதனையை தகர்த்தார் ஸ்மித்: இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்திருந்த டான் பிராட்மேனின் சாதனையை, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தகர்த்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிராக டான் பிராட்மேன் 5,028 ரன்களைக் குவித்து முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் ஸ்மித், இங்கிலாந்துக்கு எதிராக (டெஸ்ட், ஒருநாள், டி20) மொத்தம் 5,085 குவித்து பிராட்மேனை முந்தியுள்ளார்.
டான் பிராட் மேன் ஆடிய கால கட்டத்தில், ஒருநாள், டி20 வடிவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓர் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஸ்டீவன் ஸ்மித். இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் மொத்தம் 5,085 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்த வரிசையில் ஓர் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்து முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6,707 ரன்கள் எடுத்துள்ளார். 5,551 ரன்களுடன் விராட் கோலி 2-ம் இடத்திலும் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), 5,108 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் 3-ம் இடத்திலும்(இலங்கைக்கு எதிராக) உள்ளனர். ஸ்மித் 4-வது இடத்தைப் பெற்றுள்ளார்.