

பெர்த்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
பெர்த் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, அறிமுக வீரரான மஹ்லி பியர்ட்மேனின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 33.4 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 32 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டாம் பேன்டன் 25, வில் ஜேக்ஸ் 25, ஜோ ரூட் 17, பென் டக்கெட் 9, கேப்டன் ஹாரி புரூக் 1, ஜோர்டான் காக்ஸ் 2, சேம் கரண் 0, லியாம் டாவ்சன் 0, ஜேமி ஓவர்டன் 4, ஜோப்ரா ஆர்ச்சர் 11 ரன்களில் நடையை கட்டினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மஹ்லி பியர்ட்மேன் 7.4 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன், 24 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஸ்பென்சன் ஜான்சன் 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதையடுத்து 132 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 23.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. கேப்டன் மிட்செல் மார்ஷ் 30 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசினார். கூப்பர் கானொலி 27, ஜோஷ் இங்லிஷ் 23, மேட் ரென்ஷா 26 ரன்கள் சேர்த்தனர்.
7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளை (15-ம் தேதி) அடிலெய்டில் நடைபெறுகிறது.