

சென்னை: ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் வரும் அக்டோபர் 26 முதல் 29 வரை சென்னை காரப்பாக்கத்தில் உள்ள கே.சி.ஜி கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம், சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான், மாலத்தீவு, பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் ஆகிய 13 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் இந்த தொடரின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் ஜெர்சி அறிமுக விழா சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இந்தியாவின் பாட்மிண்டன் நட்சத்திரமும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிக்கான லோகோ மற்றும் சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பி.வி.சிந்து கூறும்போது, “டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாட்டில் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்டோர் இந்திய அளவில் மத்திய அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளதாக கூறுகின்றனர். இது சாதாரண விஷயம் அல்ல. வீரர், வீராங்கனைகள் பலரை உருவாக்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர நாடு முழுவதிலும் பல போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அதில் ஒன்றாக தற்போது சென்னையில் கே.சி.ஜி. கல்லூரி வளாகத்தில் 13 நாடுகள் பங்கேற்கும் ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதிலும் நமது வீரர்கள் பிரகாசித்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.