2 நாட்களில் முடிவடைந்தது ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஹெட் விளாசலில் ஆஸி. வெற்றி!

2 நாட்களில் முடிவடைந்தது ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஹெட் விளாசலில் ஆஸி. வெற்றி!
Updated on
2 min read

பெர்த்: இங்​கிலாந்து அணிக்கு எதி​ரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரின் முதல் போட்​டி​யில் டிரா​விஸ் ஹெட்​டின் அதிரடி​யான சதத்​தால் ஆஸ்​திரேலிய அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

பெர்த் நகரில் நடை​பெற்று வந்த இந்த டெஸ்ட் போட்​டி​யில் டாஸ் வென்று பேட் செய்த இங்​கிலாந்து அணி மிட்​செல் ஸ்டார்க்​கின் வேகப்​பந்து வீச்சை தாக்​குப்​பிடிக்க முடி​யாமல் 32.5 ஓவர்​களில் 172 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஹாரி புரூக் 52, ஆலி போப் 46, ஜேமி ஸ்மித் 33 ரன்​கள் சேர்த்​தனர். ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் மிட்​செல் ஸ்டார்க் 7 விக்​கெட்​கள் வீழ்த்​தி​யிருந்​தார்.

இதையடுத்து விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 39 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 123 ரன்​கள் எடுத்​தது. நேதன் லயன் 3 ரன்​களு​ட​னும், பிரெண்​டன் டாகெட் ரன் ஏதும் எடுக்​காமலும் களத்​தில் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி 45.2 ஓவர்​களில் 132 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

நேதன் லயன் 4 ரன்​களில் பிரைடன் கார்ஸ் பந்​தில் நடையை கட்​டி​னார். பிரெண்​டன் டாகெட் 7 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இங்​கிலாந்து அணி தரப்​பில் பென் ஸ்டோக்ஸ் 5, பிரைடன் கார்ஸ் 3, ஜோப்ரா ஆர்ச்​சர் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

40 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இங்​கிலாந்து அணி மீண்​டும் ஒரு முறை ஆஸ்​திரேலிய வேகப்​பந்து வீச்சை தாக்​குப்​பிடிக்க முடி​யாமல் 34.4 ஓவர்​களில் 164 ரன்​களுக்கு சுருண்​டது. ஸாக் கிராலி 0, பென் டக்​கெட் 28, ஆலி போப் 33, ஜோ ரூட் 8, ஹாரி புரூக் 0, கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் 2, ஜேமி ஸ்மித் 15, கஸ் அட்​கின்​சன் 37, பிரைடன் கார்ஸ் 20, ஜோப்ரா ஆர்ச்​சர் 5 ரன்​களில் நடையை கட்​டினர். மார்க் வுட் 4 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். ஆஸ்​திரேலிய அணி சார்​பில் ஸ்காட் போலண்ட் 4 விக்​கெட்​களை​யும் மிட்​செல் ஸ்டார்க், பிரெண்​டன் டாகெட் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர். இங்​கிலாந்து அணி 104 ரன்​களுக்கு எல்​லாம் 7 விக்​கெட்​களை பறி​கொடுத்​திருந்​தது. பின்​வரிசை வீரர்​களான கஸ் அட்​கின்​சன் 32 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 37 ரன்​களும், பிரைடன் கார்ஸ் 20 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 20 ரன்​களும் விளாசி​யதன் காரண​மாக இங்​கிலாந்து அணி​யால் 150 ரன்​களை கடக்க முடிந்​திருந்​தது.

205 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி டிரா​விஸ் ஹெட்​டின் அதிரடி​யால் 28.2 ஓவர்​களி​லேயே 2 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. தொடக்க வீர​ராக களமிறங்​கிய டிரா​விஸ் ஹெட் 69 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் சதம் விளாசி​னார். இது சர்​வ​தேச டெஸ்ட் அரங்​கில் அவரது 10-வது சதமாக அமைந்​தது. அதிரடி​யாக விளை​யாடிய டிரா​விஸ் ஹெட் 83 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 16 பவுண்​டரி​களு​டன் 123 ரன்கள் விளாசிய நிலை​யில் பிரைடன் கார்ஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

மற்​றொரு தொடக்க வீர​ரான ஜேக் வெத​ரால்டு 23 ரன்​களில் வெளி​யேறி​னார். தனது 24-வது அரை சதத்தை கடந்த மார்​னஸ் லபுஷேன் 49 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 6 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​களும், கேப்​டன் ஸ்டீவ் ஸ்மித் 2 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். இரு இன்​னிங்​ஸை​யும் சேர்த்து 10 விக்​கெட்​கள் வீழ்த்​திய மிட்​செல் ஸ்டார்க் ஆட்ட நாயக​னாக தேர்​வா​னார். 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்​பர் 4-ம் தேதி பிரிஸ்​பனில் தொடங்​கு​கிறது.

104 வருடங்​களுக்கு பிறகு… - பெர்த்​தில் நடை​பெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரின் முதல் போட்டி 2 நாட்​களில் முடிவடைந்​தது. ஆஷஸ் தொடரில் 2 நாட்​களில் ஒரு டெஸ்ட் போட்டி முடிவடைவது இது 6-வது முறை​யாகும்.

1888-ம் ஆண்​டில் லார்ட்​ஸ், தி ஓவல், மான்​செஸ்​டர் ஆகிய மைதானங்​களில் நடை​பெற்ற போட்​டிகளும் 2 நாட்​களில் முடிவடைந்​திருந்​தது.

மேலும் 1890-ம் ஆண்டு தி ஓவல் மைதானத்​தி​லும், 1921-ம் ஆண்டு நாட்​டிங்​ஹாமிலும் நடை​பெற்ற டெஸ்ட் போட்​டி​களும் 2 நாட்​களில் முடிவுக்கு வந்​திருந்​தன. இந்த வரிசை​யில் தற்​போது 104 வருடங்​களுக்கு பிறகு ஆஷஸ் தொடரின் போட்டி 2 நாட்​களில் நிறைவு பெற்​றுள்​ளது. மேலும் ஆஸ்​திரேலிய மண்​ணில்​ நடை​பெற்​ற ஆஷஸ்​ டெஸ்ட்​ போட்​டி 2 நாட்​களில்​ முடிவடைவது இது முதல்​ ​முறை​யாகும்.

2 நாட்களில் முடிவடைந்தது ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஹெட் விளாசலில் ஆஸி. வெற்றி!
ஆஸி. ஓபன் பாட்மிண்டன்: இறுதிப் போட்டியில் லக்‌ஷயா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in