

மெல்பர்ன்: பிக் பாஷ் டி20 தொடரின் தொடக்க ஆட்டத்தை வரும் டிசம்பர் மாதம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே முடிவு செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக வருங்காலத்தில் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஆட்டத்தையும் இந்தியாவில் நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி டாட் கிரீன்பெர்க் கூறும்போது, “குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடுதல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் தெளிவாக உள்ளன.
இதுதொடர்பாக நாங்கள் தற்போது திட்டமிடவில்லை. ஆனால் எதிர்காலத்தில் கண்டிப்பாகப் பரிசீலிக்கப்படக்கூடிய ஒரு விஷயமே. எங்களுக்கு இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வலுவாகவே உள்ளது.
உலக கிரிக்கெட் அரங்கில் உள்ள சவால் என்னவென்றால் கால அட்டவணையில் 365 நாட்கள் மட்டுமே உள்ளன. நாங்கள் விரும்பும் போட்டிகளை நடத்த வேண்டுமானால், கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் தேவைப்படும்” என்றார்.