

அல்மாட்டி: அல்மாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ரியான் செக்கர்மேன் ஜோடி பட்டம் வென்றது. கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் இந்த டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வந்தன.
நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் பாம்ப்ரி, செக்கர்மேன் ஜோடியும், ஆஸ்திரியாவின் லூகாஸ் மிட்லர், நீல் ஓபர்லைட்னர் ஜோடியும் மோதின. இதில் யூகி பாம்ப்ரி, செக்கர்மேன் ஜோடி 7-6(3), 6-7(1), [10-2] என்ற செட் கணக்கில் லூகாஸ், நீல் ஓபர்லைட்னர் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் மேத்வதேவ் சாம்பியன்
அல்மாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் டேனியல் மேத்வதேவ் சாம்பியன்ஷிப்பை வென்று பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
நேற்று நடைபெற்ற ஒற்றையர் இறுதிச் சுற்றுப் போட்டியில் டேனியல் மேத்வதேவும், ஜார்ஜியாவின் நிக்கோலஸ் பசிலாஷ்விலியும் மோதினர்.இதில் டேனியல் மேத்வதேவ் 6-7(6), 6-1, 6-3 என்ற செட் கணக்கில் நிக்கோலஸை வீழ்த்தி பட்டம் வென்றார்.கடந்த ஆண்டும் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் டேனியல் மேத்வதேவும் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.