

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 4-6, 6-0, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் 72-ம் நிலை வீரரான போர்ச்சுகலின் ஜெய்மி ஃபாரியாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 7-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 6-1, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்ஸ்னியை தோற்கடித்தார்.
8-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 5-7, 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் 47-ம் நிலை வீரரான போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸையும், 11-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்செஸ் தியாபோ 6-3, 7-6 (7-2), 7-5 என்ற செட் கணக்கில் 157-ம் நிலை வீரரான ஜப்பானின் ரெய் சகாமோட்டோவையும், 15-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்ளிக் 6-3, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் 67-ம் நிலை வீரரான பிரான்ஸின் அட்ரியன் மனரினோவையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
18-ம் நிலை வீரரான செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா, 20-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பால், 22-ம் நிலை வீரரான மோனாக்கோவின் வாலண்டின் வச்சேரோட், 26-ம் நிலை வீரரான பிரான்ஸின் ஆர்தர் ரின்டர்கெனெக், 27-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் தாமஸ் எட்சேவெரி ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றில் நுழைந்தனர். 23-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 7-6 (7-3), 2-6, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் 39-ம் நிலை வீரரான ஸ்பெயினின் டேனியல் மெரிடாவிடம் தோல்வி அடைந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனும் முதல் நிலை வீராங்கனையுமான பெலாரஸின் அரினா சபலென்கா 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் போலினா லட்சென்கோவையும், 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த சோபியா கெனினையும், 6-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் லின்டா நோஸ்கோவா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் லன்லானா தரருடியையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.
7-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா முச்சோவா 6-1, 6-0 என்ற நேர் செட்டில் கிரேட் பிரிட்டனி கேட்டி போல்டரையும், 9-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 6-2, 6-7 (6-8), 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் மாயாவையும், 11-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மார்தா கோஸ்ட்யுக் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸையும் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
15-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் டயானா ஷ்னைடர் 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தினார். 16-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சொர்னா கிறிஸ்டியா, 18-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் கேத்ரினா அலெக்ஸாண்ட்ரோவா, 19-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, 21-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயா, 26-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவர்ரோ ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றில் நுழைந்தனர்.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ரஷ்யாவின் போலினா லட்சென்கோவுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடுகிறார் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா.