அணித் தேர்வுக் குழுத் தலைமைப் பொறுப்பு: பதவியை நீட்டிக்க விரும்பாத அஜித் அகர்கர்

அஜித் அகர்கர்

அஜித் அகர்கர்

Updated on
2 min read

வரும் அக்டோபர் 4-ம் தேதியுடன் அஜித் அகர்கரின் அணித்தேர்வுக்குழுத் தலைமைப் பொறுப்பு ஒப்பந்தம் முடிவுக்கு வருகின்றது. ஆனால், தான் பதவி நீட்டிப்புக் கோரப்போவதில்லை என்பதை அஜித் அகர்கர் பிசிசிஐ-க்குத் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்து நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரை அஜித் அகர்கர் தலைமைப் பொறுப்பில் தொடர வேண்டும் என்பது பிசிசிஐ-யின் விருப்பமாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா, “இது தொடர்பாக முடிவெடுக்க இன்னும் 15 நாட்கள் இருக்கின்றன. குறித்த காலத்தில் அகார்க்கரின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்போம்” என்று கூறியுள்ளார்.

2023-ம் ஆண்டு ஜூலை மாதம் தலைமைத் தேர்வாளராக பொறுப்பேற்ற அகர்கர், இந்திய அணியின் வெற்றிகளுடன் எதிர்கால அணியை உருவாக்கும் பணியிலும் முக்கிய பங்காற்றி வந்தார்.

அவரது பதவிக்காலத்தில் இந்திய அணி 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் ஆசியக் கோப்பையை வென்றது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, 2024 மற்றும் 2026-ம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையையும், 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியது.

மேலும், இந்திய அணியின் அடுத்த தலைமுறையை உருவாக்கும் வகையில் தேர்வுக்குழு பல முக்கிய முடிவுகளை எடுத்தது. கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் அகர்கர் தலைமையிலான குழுவுக்கு முக்கிய பங்கு இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தலைமை வகித்த சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக, டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயரை நியமிக்கவும் தேர்வுக்குழு முடிவு செய்தது.

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியை உருவாக்கும் பணியையும் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு தொடங்கியிருந்தது. ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள அந்த உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, இங்கிலாந்து தொடருக்குப் பிறகு ரோஹித் சர்மாவைத் தாண்டி அடுத்த தலைமுறையை நோக்கி நகர முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு ரோஹித்திடமும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடர்களுக்கான அணித் தேர்வு மற்றும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கும் இரானி கோப்பைக்கான அணித் தேர்வு கூட்டத்துக்கும் அகர்கரே இந்த வார தொடக்கத்தில் தலைமை வகித்தார்.

இதற்கிடையே, அகர்கரின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ விரைவில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அசாம் கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த சைகியா, இதுகுறித்து வெள்ளிக்கிழமை எந்தத் தெளிவான தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், தலைமைத் தேர்வாளர் பதவி தொடர்பான முடிவை பிசிசிஐ தாமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், அக்டோபர் மத்தியில் இந்திய அணி நியூஸிலாந்துக்கு முழுமையான சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அந்தத் தொடரில் முதலில் 5 டி20 போட்டிகளும், தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகளும், 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளன. அதற்கு முன்பாக ‘இந்தியா-ஏ’ அணி நியூஸிலாந்தில் இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதனால், புதிய தலைமைத் தேர்வாளர் நியமனம் உள்ளிட்ட தேர்வுக்குழு தொடர்பான முடிவுகளை பிசிசிஐ விரைவாக எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>அஜித் அகர்கர்</p></div>
2-வது நாளாக தங்கம் விலை உயர்வு: பவுனுக்கு ரூ.1,040 அதிகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in