

மும்பை: 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு ஓய்வு பெறுவது குறித்து தான் பரிசீலித்ததாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
அந்த தொடரில் இந்திய அணியை கேப்டனாக ரோஹித் சர்மா வழிநடத்தி இருந்தார். இறுதிப் போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. சொந்த மண்ணில் இந்திய அணி உலகக் கோப்பை வெல்லும் என தேசமே எதிர்பார்த்தது. ஆனால், சாம்பியன் பட்டத்தை கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றது.
“2023-ல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு நான் மனம் உடைந்து போனேன். இந்த விளையாட்டுக்காக அனைத்தையும் நான் கொடுத்தேன். அப்போது இனி என்னிடம் எதுவும் இல்லை என வெறுமையாக உணர்ந்தேன். கிரிக்கெட் விளையாடவே வேண்டாம் என எண்ணினேன்.
இது நான் அதிகம் நேசிக்கும் விளையாட்டு என்று நீக்கு பின்னர்தான் புரிந்தது. அதற்கு கொஞ்சம் காலமும் ஆனது. பின்னர் மீண்டும் களத்துக்கு திரும்பினேன். அந்த தோல்விக்கு பிறகு நாங்கள் எல்லோரும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தோம். அது எனக்கு மிகவும் கடினமான காலம். உலகக் கோப்பை வெல்ல வேண்டுமென 2022-ல் நான் கேப்டனாக பொறுப்பேற்ற போது முடிவு செய்தேன். அதற்காக உழைப்பை செலுத்தினேன்.
இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு ஓய்வு பெறுவது குறித்தும் பரிசீலித்தேன். ஆனால், அது இயல்பான ஒன்று. தோல்வியின் விரக்தி என புரிந்தது. மீண்டும் புத்துணர்ச்சி பெற்றேன். 2024 டி20 உலகக் கோப்பை தொடையில் கவனம் செலுத்த தொடங்கினேன். இதை இப்போது சொல்வது எளிது. ஆனால், அந்த நேரத்தில் இது மிகவும் கடினமாக இருந்தது” என குருகிராமில் நடந்த நிகழ்வில் ரோஹித் சர்மா தெரிவித்தார்.