மொராக்கோ நட்சத்திர வீரர் ஹகீமி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

அஷ்ரப் ஹகீமி

அஷ்ரப் ஹகீமி

Updated on
1 min read

மொராக்கோ நட்சத்திர கால்பந்து வீரர் அஷ்ரப் ஹகீமி மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

2023 மார்ச் மாதத்தில், 24 வயது பெண் ஒருவர் பாரிஸ் புறநகரில் உள்ள ஹகீமியின் வீட்டில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் மீது ஆரம்பகட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

மொராக்கோ நட்சத்திர பாதுகாப்பு வீரரான ஹகீமி, தற்போது உலகக் கோப்பை போட்டியில் மொராக்கோ அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன்னர், பிப்ரவரி மாதம் விசாரணை நீதிபதி எடுத்திருந்த விசாரணைக்கு அனுப்பும் முடிவை அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அதற்கு முன்பே அரசு வழக்கறிஞர்களும் ஹகீமி மீது வழக்கு விசாரணை நடத்த பரிந்துரைத்திருந்தனர்.

மொராக்கோ மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான உலகக் கோப்பை போட்டி நடைபெற சில மணி நேரங்களுக்கு முன்பாக இந்த நீதிமன்ற முடிவு வெளியானது. தனது முதல் போட்டியில் மொராக்கோ, பிரேசிலுடன் 1-1 என்ற கோல் கணக்கில் ட்ரா செய்தது.

உலகின் சிறந்த ரைட் விங் வீரர்களில் ஒருவராக கருதப்படும் ஹகீமி, தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார்.

வெர்செய்ல்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் நீதித்துறை ஆய்வுகளின் அடிப்படையில் ஹகீமி மீது விசாரணை நடத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

புகார்தாரரான பெண்ணின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் ரேச்சல்-ஃப்ளோர் பார்டோ கூறுகையில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான சட்டப் போராட்டத்திற்குப் பிறகு நீதிமன்றத்தின் இந்த முடிவு தனது வாடிக்கையாளருக்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

“நீதித்துறை தனது குரலைக் கேட்டுள்ளது என்பதிலும், அவரது வழக்கு நீதிமன்றத்தில் முழுமையாக விசாரிக்கப்படும் என்பதிலும் அவர் நிம்மதி அடைந்துள்ளார். இந்த விசாரணை மற்ற பெண்களுக்கும் துணிச்சலை அளித்து, பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் ஹகீமி, சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தான் பிரபலமான நபராக இல்லாவிட்டால் இந்த வழக்கு உருவாகியிருக்காது என்றும், சில நேரங்களில் தான் இது போன்ற குற்றச்சாட்டுக்கு எளிதான இலக்காக்கப்பட்டுள்ளதாகவும் கூறி குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

“பல ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தேன். கண்ணியத்தை காத்து, பொறுமையுடன் இருந்து, நீதித்துறையை நம்பினால் உண்மை வெளிவரும் என்று நினைத்தேன். முதல் நாளிலிருந்தே இந்த விசாரணைக்காக காத்திருக்கிறேன். இப்போது அதனை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இறுதியாக எனது தரப்பை நீதிமன்றத்தில் பேச முடியும்,” என்று ஹகீமி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

<div class="paragraphs"><p>அஷ்ரப் ஹகீமி</p></div>
ஈரான் அணிக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள்: FIFA-விடம் புகார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in