“அபிநயாவுக்கு சிறுவயது முதலே ஓட்டப் பந்தயத்தில் ஆர்வம் அதிகம்” - தந்தை நெகிழ்ச்சி

அபிநயா

அபிநயா

Updated on: 
2 min read

தென்காசி: ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தென்காசி அபிநயா சிறுவயது முதலே ஓட்டப் பந்தயத்தில் ஆர்வமுடன் பங்கேற்று வந்ததாக அவரது தந்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதில் 4×100 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த அபிநயா ராஜராஜனும் இடம்பெற்றிருந்தார். அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லூத்து கிராமத்தை சேர்ந்த ராஜராஜன் - சங்கரி தம்பதியரின் மூத்த மகள் தான் அபிநயா (19). அவர் பதக்கம் வென்றுள்ளது அவரது குடும்பத்தினரையும், கல்லூத்து கிராமத்தினரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஆர்வம் அதிகம்

அபிநயாவின் தந்தை ராஜராஜன் தனது மகளின் விளையாட்டுப் பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:

சிறு வயது முதலே ஓட்டப்பந்தயத்தில் அபிநயாவுக்கு ஆர்வம் இருந்தது. 6-ம் வகுப்பு படித்தபோது வட்டார அளவில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி பெற்றதே அவரது விளையாட்டு பயணத்துக்கான தொடக்கமாக அமைந்தது.

மாநில அளவில் சிறப்பாக விளையாட தரமான பயிற்சி தேவை என்பதை உணர்ந்து, மகளின் எதிர்காலத்துக்காக குடும்பத்துடன் திருநெல்வேலியில் குடியேறினார். தற்போது தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கல்லூத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். முறையான பயிற்சி பெற்ற அபிநயா, தொடர்ந்து மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவிக்க தொடங்கினார்.

40-க்கும் மேற்பட்ட பதக்கங்கள்

கடந்த 4 ஆண்டுகளில் 13 நாடுகளில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள அபிநயா, 10-க்கும் மேற்பட்ட சர்வதேச பதக்கங்களையும், 30-க்கும் மேற்பட்ட தேசிய பதக்கங்களையும் வென்றுள்ளார்.

அபிநாயா 10-ம்  வகுப்பு படிக்கும்போது அசாமில் நடைபெற்ற தேசிய அளவிலான ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றார். 12-ம் வகுப்பில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும். இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் அபிநயா தனிநபர் பிரிவில் பங்கேற்று பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்திய அணியில் இடம் பெற்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் தென்காசி மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ள எனது மகள் அபிநயாவுக்கு தமிழக முதல்வர் விஜய் ரூபாய் 30 லட்சம் ஊக்கத்தொகை  அறிவித்துள்ளார். அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிராமப்புறங்களில் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்க வேண்டும். அபிநயாவைப் போன்று ஏராளமான திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களை பெற்றோர்கள் ஊக்கப்படுத்தி, அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>அபிநயா</p></div>
Asian Games 2026: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in