

உலகக் கோப்பை டி20 தொடரில் டிவியை ஆன் செய்வதற்கு முன்பே ஆட்டமிழந்து கொண்டிருந்தார் அபிஷேக் சர்மா. அவர் மீது சில விமர்சனங்களும், சில கரிசனையான அணுகுமுறைகளும் தலைதூக்கின. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஒரு புதுவிதமான அபிஷேக் சர்மாவின் பேட்டிங்கைப் பார்க்க முடிந்தது.
பொதுவாக பவர் ப்ளேயை மட்டுமே குறிவைத்துத்தான் அதிரடி தொடக்க வீரர்கள் டி20-யில் ஆடுவார்கள். ஆனால், நேற்று அபிஷேக் 20 ஓவர்களும் நின்று 135 ரன்களை எடுத்தது அவரது அடுத்த குறி ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் மேட்ச் என்பது போல் தெரிந்தது. குறிப்பாக இன்னிங்ஸின் முதல் பந்தையும் கடைசி பந்தையும் ஆடினார் அபிஷேக் சர்மா. இது அதிசயம்தான்.
68 பந்துகளைச் சந்தித்த அபிஷேக் சர்மா 135 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 5-வது பெரிய தனிப்பட்ட ஸ்கோர் இது. கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 55 பந்துகளில் 141 ரன்கள் எடுத்தாரே என்று கேட்கலாம். அப்போது ஸ்ட்ரைக் ரேட் 256. நேற்று அதை விட 57% குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார்.
ஏன் இந்த மாற்றம்?
டி20-யில் கடைசி வரை நிற்க வேண்டும் என்ற தேவையெல்லாம் இல்லை. பங்களிப்பு 20 பந்துகளில் 40-50 என்று இருந்தாலே அன்றைய தினம் அது மிகச் சிறந்த செயல்திறனாகவே பார்க்கப்படும். இப்போது அந்த அணுகுமுறையில் மாற்றம் வருகிறது என்றால், 2027 உலகக் கோப்பை அணியை இந்த ஐபிஎல் தொடர் தீர்மானிக்கும் என்று எங்கோ ஒரு குரல் பிசிசிஐ-யிலிருந்து கேட்டதுதான் காரணமாக இருக்கும்.
அபிஷேக் சர்மாவிடம் கேட்டபோது ‘நாங்கள் திட்டம் வைத்திருந்தோம், பிட்ச் கொஞ்சம் மந்தமாக இருந்தது. எனவே எது வெற்றிக்கான ஸ்கோர் என்பதை நிர்ணயித்து ஆட வேண்டியிருந்தது’ என்று காரணம் சொன்னாலும், உண்மையான காரணம் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து வேறொரு தளத்துக்கு உயர வேண்டுமெனில் நின்று ஆடும் திறமை அவசியம்.
டெஸ்ட், ஒருநாள் அணிகளில் இடம்பெற வேண்டுமெனில், ‘அபிஷேக் நின்று ஆடக்கூடியவர், பந்தின் தரத்தைப் பார்த்து ஆடுபவர்’ என்றெல்லாம் அவர் நிரூபிக்க வேண்டியுள்ளது. அதன் முதல் படிதான் நேற்றைய இன்னிங்ஸ். இதற்கு முந்தைய இன்னிங்ஸ்களில், குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் அவர் பவர் ப்ளே முடிந்து களத்தில் வீரர்கள் பவுண்டரிக்கு அருகில் நிற்க வைக்கப்பட்டபோதும் அபிஷேக் தூக்கி அடிக்கவே முயன்றார்.
அபிஷேக் ஷாட்களில் இத்தனை கட்டுக்கோப்புகள் இருந்ததில்லை. நேற்று கட்டுக்கோப்பை தன் அணிகலனாகச் சேர்த்துள்ளார். முன்பு சிக்சர் விளாசினால், அதில் கொஞ்சம் ரிஸ்க் இருக்கும். ஆனால் நேற்று 10 சிக்சர்கள் அடித்தார். அந்த பத்து சிக்சர்களுமே கிளீன் ஹிட். அந்த அளவுக்கு அவர் தன் கட்டுக்கோப்பை மேம்படுத்தியுள்ளார். ஆகவே தன் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கத்துடன் முதிர்ச்சியடைந்து வருகிறார் அபிஷேக் சர்மா.
இனி கண்டபடி மட்டையை விட்டு 40-50 ரன்களில் அவுட் ஆகும் வாய்ப்பில்லை என்றுதான் தெரிகிறது. ஆனால், உள்ளுணர்வைக் கட்டுப்படுத்தும்போது இயற்கையான சில ஷாட்கள் வராமல் போய் விடும் ஆபத்தும் உள்ளது. இதை அபிஷேக் எப்படி ஈடுகட்டுவார் என்பதைப் பொறுத்து, அவரது அதிரடி ஆட்டமும், நின்று ஆடும் ஆட்டமுமான இந்த புதிய கலவை எத்தனை காலம் நீடிக்கும் என்பது தீர்மானிக்கப்படும்.