

சென்னை: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியான இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. அரை இறுதி வாய்ப்பை பெற வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங் ஆகியோர் நீக்கப்பட்டு அக்சர் படேல், சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டனர். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி தொடக்கம் கொடுத்தார். நரவா வீசிய 2-வது பந்தில் சஞ்சு சாம்சன் சிக்ஸரும், அடுத்த பந்தில் பவுண்டரியும் விரட்டினார். இதனால் முதல் ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டன. முசாராபானி வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன் சிக்ஸர் விளாசினார்.
டினோடென்டா மபோசா வீசிய 3-வது ஓவரில் அபிஷேக் சர்மா 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசினார். சஞ்சு சாம்சன் தனது பங்குக்கு ஒரு பவுண்டரி விரட்ட இந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் குவிக்கப்பட்டன. மட்டையை சுழற்றிய சஞ்சு சாம்சன் 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் முசாராபானி பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் விளாசிய போது ரியான் பரூலிடம் கேட்ச் ஆனது.
முதல் விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி 3.4 ஓவர்களில் 48 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து மட்டையை சுழற்றினார். பிராடு இவான்ஸ் வீசிய 5-வது ஓவரில் அபிஷேக் சர்மா தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் பறக்கவிட்டார். ரிச்சர்டு நரவா வீசிய அடுத்த ஓவரில் இஷான் கிஷன் 2 பவுண்டரிகளை விரட்ட அபிஷேக் சர்மா கடைசி பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார்.
அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 26 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். இது அவரது 9-வது அரை சதமாக அமைந்தது. சிகந்தர் ராசா வீசிய 11-வது ஓவரில் தொடர்ச்சியாக தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விரட்டிய இஷான் கிஷன் அடுத்த பந்தில் பேக்வேர்டு பாயின்ட் திசையின் நின்ற நரவாவிடம் எளிதாக பிடிகொடுத்து வெளியேறினார். அவர் 38 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் இருந்த போது பிராடு இவான்ஸ் வீசிய பந்தில் கொடுத்த கேட்ச்சை பைன் லெக் திசையில் முசாராபானி தவறவிட்டார். டினோடென்டா மபோசா வீசிய 13-வது ஓவரின் முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசினார் சூர்யகுமார் யாதவ். இதே ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அபிஷேக் சர்மா கடைசி பந்தில் லாங் ஆன் திசையில் நின்ற சிகந்தர் ராசாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அபிஷேக் சர்மா 30 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, ரியான் பரூல் வீசிய 14-வது ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசினார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் விளாசிய நிலையில் ரிச்சர்டு நரவா பந்தில், தசின்கா முசிகிவாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து திலக் வர்மாவும் அதிரடியாக விளையாடினார். பிராடு இவான்ஸ் வீசிய 17-வது ஓவரில் திலக் வர்மா எக்ஸ்டிரா கவர் திசையில் சிக்ஸர் விளாசினார். ரிச்சர்டு நரவா வீசிய 19-வது ஓவரில் திலக் வர்மா தொடர்ச்சியாக 2 சிக்ஸர்களை விளாச இந்த ஓவரில் 21 ரன்கள் சேர்க்கப்பட்டன.
பிராடு இவான்ஸ் வீசிய கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா 2 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். மட்டையை சுழற்றிய ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்களும், திலக் வர்மா 16 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் விளாச 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது.
இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வேட்டையாடிய 2-வது அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இந்த வகை சாதனையில் 2007-ம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக இலங்கை அணி 260 ரன்கள் குவித்தது முதலிடத்தில் உள்ளது. மேலும் டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாகவும் இது அமைந்தது.
இதற்கு முன்னர் 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்திருந்தது. 257 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரரான பிரையன் பென்னட் 59 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தடிவான்ஷே மருமானி 20, டியோன் மையர்ஸ் 6, சிகந்தர் ராசா 31, ரியான் பரூல் 0, டோனி முன்யோங்கா 11, தசிங்கா முசிகிவா 7 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தினார். வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு சூப்பர் 8 சுற்றில் இது முதல் வெற்றியாக அமைந்தது.
இதன் மூலம் 2 புள்ளிகளுடன் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. வரும் 1ம் தேதி இந்திய தனது கடைசி ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி அரை இறுதியில் கால்பதிக்கும்.
26 ரன்களில் தப்பித்த இஷான்
இஷான் கிஷன் 26 ரன்களில் இருந்த போது ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்தார். பிரையன் பென்னட் வீசிய 9-வது ஓவரின் முதல் பந்தை பந்தை டீப் பேக்வேர்டு பாயின்ட் திசையில் இஷான் கிஷன் விளாசிய போது அங்கு நின்ற முசிகிவா கேட்ச்சை தவறவிட்டார். எனினும் இந்த வாய்ப்பை இஷான் கிஷன் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர், 24 பந்துகளில், 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
26 டாட் பால்கள்
சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 27 பந்துகளில் மட்டுமே ரன்கள் சேர்க்கவில்லை. இதன் மூலம் டி 20 உலகக் கோப்பையில் குறைந்த டாட் பந்துகளை கொண்ட அணிகளின் சாதனையை தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி பகிர்ந்து கொண்டது. தென் ஆப்பிரிக்க அணி 2106-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 26 பந்துகளை டாட் பாலாக வைத்திருந்தது.
17 சிக்ஸர்கள்
சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி 17 சிக்ஸர்களை பறக்கவிட்டது. டி20 உலகக் கோப்பையில் ஓர் இன்னிங்ஸில் இந்திய அணி அதிக சிக்ஸர்களை விளாசுவது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் 2024ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 15 சிக்ஸர்கள் அடித்திருந்தது.
சிக்ஸர் வேட்டை
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 63 சிக்ஸர்களை விளாசியுள்ளது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி ஒரு தொடரில் அதிக சிக்ஸர்களை விளாசுவது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் கடந்த 2024-ம் ஆண்டு தொடரில் இந்திய அணி 61 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தது. இந்த வகை சாதனையில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 66 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் உள்ளது.
31 பந்துகளில் 84 ரன்கள்
ஹர்திக், திலக் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 31 பந்துகளில் 84 ரன்களை குவித்து மிரட்டியது. தப்பித்தது இந்திய அணி’ குரூப் 1-ல் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தின் முடிவால் இந்திய அணி மீதான அழுத்தம் குறைந்தது. தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதால் இந்திய அணிக்கு ரன் ரேட் சிக்கல் இல்லாமல் போனது. ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி 2 புள்ளிகளை பெற்றுள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளும் 2 புள்ளிகளிலேயே தொடர்கிறது. இந்த இரு அணிகளும் தங்களது கடைசி ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. வரும் 1ம் தேதி நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே கடைசி அணியாக அரை இறுதி சுற்றில் கால்பதிக்கும்.
28 ஆயிரம் ரசிகர்கள்
இந்த ஆட்டத்தை காண்பதற்கு சேப்பாக்கம் மைதானத்துக்கு நேற்று 28, 247 ரசிகர்கள் வந்திருந்தனர்.