இன்னுமா கம்பீரை நம்புறாரு? - இந்திய அணி கனவுடன் வாழும் அபிமன்யு ஈஸ்வரன்!

இன்னுமா கம்பீரை நம்புறாரு? - இந்திய அணி கனவுடன் வாழும் அபிமன்யு ஈஸ்வரன்!
Updated on: 
2 min read

ஏற்கெனவே 3 வடிவ வீரர்களான ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஷுப்மன் கில், ராகுல் போன்றோரை ஒரு வடிவ அல்லது இரு வடிவ வீரர்களாக மாற்றி எதிலும் வெற்றி பெற முடியாமல் கம்பீர் தலைமைப் பயிற்சியில் இந்திய அணி சறுக்கிக் கொண்டு போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்திய அணியில் ஆடும் கனவை இன்னமும் தான் கண்டுகொண்டிருப்பதாக அபிமன்யு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 

31  வயதான அபிமன்யூ ஈஸ்வரன் 2025 இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தார். அதன் பிறகு இல்லை. 

ரஞ்சி கோப்பை தொடரின் 2-வது சுற்றில் சர்வீசஸ் அணிக்கு எதிராக பெங்கால் அணிக்காக 56 ரன்கள் எடுத்த பிறகு பேசிய அவர், “நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோதே நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. அந்த கனவு இன்னும் அப்படியே இருக்கிறது. அணியில் இடம்பிடித்துவிட்டு பின்னர் நீக்கப்படும்போது, ‘மீண்டும் எனக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை?’ என்ற எண்ணம் வருவது இயல்புதான். இதுபோன்ற சூழல்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் காலப்போக்கில் அதற்குப் பழகிவிடுகிறோம். வாழ்க்கையின் ஒரு பகுதிதான் அது. அனுபவம் நமக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கிறது” என்றார்.

புதிய உள்நாட்டு கிரிக்கெட் சீசனில் கிழக்கு மண்டல அணிக்காக துலீப் கோப்பையில் விளையாடிய அபிமன்யு, இரு அரைசதங்களுடன் தொடங்கினார். தொடர்ந்து ரஞ்சி கோப்பையின் முதல் சுற்றில் டெல்லிக்கு எதிராக 34 மற்றும் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்தார்.

இந்தியா ‘ஏ’ அணிக்காக மட்டும் 51 இன்னிங்ஸ்களில் 1,909 ரன்கள் குவித்துள்ள அபிமன்யுவின் சராசரி 38.18 ஆகும். இதில் 6 சதங்களும், 7 அரைசதங்களும் அடங்கும். இந்தியா ‘ஏ’ அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலும், அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் அபிமன்யுவே முதலிடத்தில் உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நீங்கள் எந்த அணிக்காக விளையாடுகிறீர்களோ, அந்த அணிக்காக களமிறங்கி சிறப்பாக செயல்படுவதுதான் உங்கள் பணி. ஒவ்வொரு நாளும் களத்திற்கு வந்து, அணியின் தேவையை உணர்ந்து அதற்கேற்ப செயல்படுவதுதான் ஒரு வீரருக்கு மிகப்பெரிய சவால். தற்போது நான் கிரிக்கெட்டை முழுமையாக ரசித்து விளையாடுகிறேன்” என்றார்.

இந்திய அணியில் இடம்பிடிப்பதே இறுதி இலக்கு என்றாலும், அதற்கு முன் பெங்கால் அணிக்காக சிறப்பாக செயல்படுவதையே முக்கியமாகக் கருதுவதாகவும் அபிமன்யு தெரிவித்துள்ளார்.

இந்த சீசனில் பெங்கால் அணி தனது முதல் போட்டியில் கல்யாணியில் டெல்லியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பின்னர் டெல்லியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக விளையாடியபோது, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் கடினமாகவும் இருந்த பாலம் மைதான ஆடுகளத்தில் அபிமன்யு 56 ரன்கள் எடுத்து அணியின் அதிகபட்ச ஸ்கோரராக திகழ்ந்தார்

கடந்த ரஞ்சி கோப்பை சீசனில் பெங்கால் அணி அரையிறுதி வரை முன்னேறியது. அங்கு இறுதியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜம்மு-காஷ்மீர் அணியிடம் தோல்வியடைந்தது. இந்த முறை அந்த ஏமாற்றத்தை மறந்து, பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் பெங்கால் களமிறங்கியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in