'நிறைய பயிற்சி செய்தேன்; எனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தேன்' - ஆகாஷ் மத்வால்

ஆகாஷ் மத்வால்
ஆகாஷ் மத்வால்
Updated on
1 min read

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வெளியேற்றி உள்ளது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. அதற்கு மிக முக்கிய காரணம் மும்பை அணியின் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வாலின் செயல்பாடு. 3.3 ஓவர்கள் வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். அவர் வீசிய 21 பந்துகளில் 17 பந்துகள் ரன் ஏதும் கொடுக்காமல் டாட் பந்துகளாக வீசி இருந்தார்.

இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேவின் சாதனையை ஆகாஷ் சமன் செய்துள்ளார். கடந்த 2009 சீசனில் கும்ப்ளே, 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். நேற்றைய ஆட்டத்தில் அதை சமன் செய்துள்ளார் ஆகாஷ். கும்ப்ளேவின் எக்கானமி ரேட் 1.57. ஆகாஷின் எக்கானமி ரேட் 1.4.

“நான் நிறைய பயிற்சி செய்து கொண்டிருந்தேன். எனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தேன். நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். கிரிக்கெட் விளையாட்டு எனது பேஷன். கடந்த 2018 முதல் இதற்காக தான் காத்திருந்தேன். நிர்வாகம் எங்களுக்கு டார்கெட் கொடுக்கிறது. நாங்கள் எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வர முயற்சிக்கிறோம். அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு சாம்பியனாக சீசனை நிறைவு செய்ய வேண்டும். பூரனின் விக்கெட்டை வீழ்த்திய விதம் எனக்கு ஸ்பெஷல்” என ஆட்ட நாயகன் விருதை வென்ற ஆகாஷ் தெரிவித்தார்.

யார் இவர்?

29 வயதான ஆகாஷ் மத்வால், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் கடந்த 2019 முதல் தன் மாநில அணிக்காக விளையாடி வருகிறார். வலது கை மித வேகப்பந்து வீச்சாளர். சிவில் இன்ஜினியரிங் பட்டம் முடித்துள்ளார். கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஏலத்தில் 20 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஆகாஷை ஏலம் எடுத்தது. நடப்பு சீசனில் 7 போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி உள்ளார். மொத்தம் 21.3 ஓவர்கள் வீசி 13 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in