வில்வித்தையில் கவனம் ஈர்த்துள்ள பிரதமேஷ் ஜாவ்கர்

வில்வித்தையில் கவனம் ஈர்த்துள்ள பிரதமேஷ் ஜாவ்கர்
Updated on
2 min read

மும்பை: சீனாவின் ஷாங்காய் நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை தொடரின் ஆண்கள் தனிநபர் காம்பவுண்ட் பிரிவு இறுதிப் போட்டியில், 2 முறை உலக சாம்பியனும் நம்பர் 1 வீரருமான நெதர்லாந்தின் மைக் ஷ்லோசரை வீழ்த்தி அனைவரது பார்வையையும் ஈர்த்துள்ளார் இந்தியாவின் பிரதமேஷ் ஜாவ்கர். 19 வயதான பிரதமேஷ், மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா பகுதியைச் சேர்ந்தவர்.

தான் பங்கேற்ற முதல் தொடரிலேயே அதுவும் உலகக் கோப்பையில் தங்கம் வென்றுள்ள பிரதமேஷ் ஜாவ்கருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. உலகக் கோப்பை தொடரில் பிரதமேஷ், இறுதிப் போட்டிக்கு முன்னதாக தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜாங்கோ, சோய் யாங்கீ, எஸ்தோனியாவின் ராபின் ஜாட்மாவை ஆகியோரை வீழ்த்தி இருந்தார்.

சர்வதேச வில்வித்தை அரங்கில் 19 தங்கம் உட்பட 41 பதக்கங்களை வென்று குவித்திருந்த மைக் ஷ்லோசருக்கு இறுதிப் போட்டியில் கடும் சவால் கொடுத்தே முதலிடத்தை உச்சி முகர்ந்தார் பிரதமேஷ் ஜாவ்கர். இருவருக்கும் தலா 15 வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

இதில் கடைசி வாய்ப்பில் மைக் ஷ்லோசர் செலுத்திய அம்பு 10 புள்ளிகள் கொண்ட வட்டத்தின் விளிம்பு பகுதியை தாக்கியது. ஆனால் பிரதமேஷ் ஜாவ்கர் துல்லியமாக வட்டத்தின் மையப்பகுதியில் அம்பை செலுத்தினார். முடிவில் 149-148 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார் பிரதமேஷ் ஜாவ்கர்.

ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் என்ற போதிலும் பிரதமேஷ் ஜாவ்கர் மனதை ஒருமுகப்படுத்தி நிதானமாகவும், கவனத்துடனும் இலக்கை குறிவைத்து அம்பை நேர்த்தியாக செலுத்திய விதமும் பாராட்டும் வகையில் இருந்தது. பிரதமேஷ் ஜாவ்கர் கூறுகையில், ‘‘இறுதிப்போட்டியில் எதிர்த்து போட்டியிட்ட மைக் ஷ்லோசர் குறித்து அதிகம் யோசிக்கவில்லை. எனக்கு நானே நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எனது போட்டியில் மட்டும் கவனம் செலுத்தினேன். இலக்குகளை துல்லியமாக தாக்க முயற்சித்தேன்.

சக இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து உற்சாகப்படுத்தினர். கடைசியில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவிருக்கும் போட்டிகளில் இந்தியாவுக்கு அதிக தங்கப் பதக்கம் வென்றுகொடுக்க விரும்புகிறேன். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் ஜெர்மனியில் நடைபெற உள்ளது. அந்த தொடரிலும், சீனாவில் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் தங்கப் பதக்கம் வெல்ல விரும்புகிறேன்” என்றார்.

பிரதமேஷ் ஜாவ்கர் தங்கப் பதக்கம் வென்ற வீடியோவையும், அதனுடன் ஒரு பதிவையும் ட்விட்டரில் வெளியிட்டார் அவரது பயிற்சியாளர் சுதிர் புத்ரன். அதில், “போர் வீரர்கள் வலம் வந்த பூமியில், திறமையான வில்வித்தை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உங்களில் எத்தனை பேர் இந்தியாவைச் சேர்ந்த 19 வயது இளைஞரான பிரதமேஷ் ஜாவ்கரை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்? ஷாங்காய் வில்வித்தை உலகக் கோப்பையில் அவர், பட்டம் வென்றுள்ளார். அவர், மனதை ஒருமுகப்படுத்துவதிலும், கவனத்திலும் அற்புதமாக செயல்பட்டார்” என தெரிவித்திருந்தார்.

சுதிர் புத்ரனின் இந்த பதிவுக்கு பதில் அளித்த பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா, “நம்பமுடியாத வகையில் உள்ளது. பிரதமேஷ் ஜாவ்கருக்கு எஃகு போன்ற நரம்புகள் மற்றும் லேசர் போன்ற கூர்மையான கவனம் இருப்பது போல் தெரிகிறது. அவர் சாம்பியனாக உருவாக்கப்பட்டுள்ளார்.

நீங்கள் சொல்வது சரிதான், சுதிர் புத்ரன். பிரதமேஷ் ஜாவ்கர் பற்றி நான், இன்று வரை கேள்விப்பட்டதே இல்லை ஆனால் இனிமேல் அவரைக் கண்காணிக்கிறேன். செப்டம்பரில் ஹெர்மோசில்லோவில் நடக்கும் இறுதிப் போட்டியில் அவர் வெற்றி பெறுவார் என நம்புகிறேன். அவர் எழுந்துவரட்டும்” எனத் தெரிவித்துள்ளார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in