மாநில ஜூனியர் ஹாக்கி போட்டி - தூத்துக்குடி மாவட்ட அணி வெற்றி

மாநில ஜூனியர் ஹாக்கி போட்டி - தூத்துக்குடி மாவட்ட அணி வெற்றி
Updated on
1 min read

கோவில்பட்டி: ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பில் கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை மாநில ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன் போட்டி நடந்தது. போட்டியில் 35 அணிகள் கலந்துகொண்டன. போட்டிகள் லீக் முறையில் நடத்தப்பட்டன. இதில், தேர்வு பெற்ற அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றன.

இதில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சென்னை, மதுரை மாவட்ட அணிகள் வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து நேற்று காலை அரையிறுதி போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் தூத்துக்குடி அணியுடன் ராமநாதபுரம் அணி மோதியது. இதில், 3-1 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது. அடுத்த நடந்த போட்டியில் சென்னை அணியும், மதுரை அணியும் மோதின. இதில், 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றிபெற்றது.

மதியம் 2.30 மணிக்கு நடந்த 3,4-வது இடங்களுக்கான போட்டியில் ராமநாதபுரம் அணியுடன் மதுரை அணி மோதியது. இதில், ராமநாதபுரம் அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று 3-வது இடத்தை பிடித்தது. தொடர்ந்து 4.30 மணிக்கு நடந்த இறுதி போட்டியில் தூத்துக்குடி அணியும், சென்னை அணியும் மோதின. இதில், 4-3 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது.

சென்னை அணி 2-வது இடம் பெற்றது. தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாசலம், ஒலிம்பியன் அர்ஜுனா விருதுபெற்ற முகமது ரியாஸ் ஆகியோர் வெற்றிபெற்ற அணிக்கு லட்சுமி அம்மாள் நினைவு சூழற்கோப்பை வழங்கினர்.

விழாவில் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் டி.மோகன் ராஜ் அருமை நாயகம், முதுநிலை துணைத் தலைவர் எம்.நாகமுத்து, செயலாளர் சி.குரு சித்திர சண்முக பாரதி, நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in