பட்லர், சஞ்சு சாம்சன் அதிரடி: ஹைதராபாத் அணிக்கு எதிராக 214 ரன்கள் குவித்த ராஜஸ்தான்

சாம்சன் மற்றும் பட்லர்
சாம்சன் மற்றும் பட்லர்
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 52-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ராஜஸ்தான் அணி 214 ரன்கள் குவித்துள்ளது. பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் என இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் விக்கெட்டிற்கு 54 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர் இருவரும். இளம் வீரர் ஜெய்ஸ்வால் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், பட்லருடன் பலமான கூட்டணி அமைத்தார். இருவரும் 138 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பட்லர், 59 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து வெளியேறினார். 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.

அதே நேரத்தில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன், 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அசத்தினார். 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.

20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். தற்போது 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஹைதராபாத் அணி விரட்டி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in