

லாகூர்: ஐ.பி.எல் காரணமாக பாகிஸ்தான் தொடரில் நியூசிலாந்து நாட்டு வீரர்களுக்கு பெரிதாக ஆர்வம் இல்லை என்று முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளும் தலா 5 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் மோதவிருக்கின்றன. முதல் ஒருநாள் போட்டி லாகூர் மைதானத்தில் தற்போது நடந்துவருகிறது. இதற்கான நியூசிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. முன்னணி வீரர்கள் பலரும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருப்பதால், அதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
“நியூசிலாந்து முழு அணியையும் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், சில வீரர்கள் ஐ.பி.எல் விளையாட சென்றுள்ளனர், சிலர் உடற்தகுதி காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த தொடர் மீது அதிக ஆர்வம் இல்லை என்பதுபோல் உள்ளது. டெஸ்ட் தொடருக்கு முழுமையான அணியை அனுப்பியிருந்தனர். அதனால், தொடரும் சுவாரஸ்யமாக இருந்தது.
ஆனால், இப்போது அப்படி இல்லை. சூழ்நிலைக்கேற்ப ஒரு அணியை தயார் செய்து அனுப்பியிருக்கிறார்கள் போல. ஒரு கிரிக்கெட் வீரரின் முதல் முன்னுரிமையாக தேசிய அணியே இருக்க வேண்டும்.
ஆனால், தேசிய அணியில் விளையாட முன்னுரிமை அளிக்காமல் செல்லும் வீரர்கள் எவ்வாறு தடையில்லாச் சான்றிதழை (NOC) பெற்றார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. இது எப்படி சாத்தியமாகிறது, தடையில்லாச் சான்றிதழுக்கான அளவுகோல் என்ன என்பதும் தெரியவில்லை" என்று தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார் அப்துல் ரசாக்.