

புதுடெல்லி: உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால் சூர்யகுமார் யாதவ் நிச்சயம் அசத்துவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார். அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று முறை முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி இருந்தார் சூர்யகுமார் யாதவ். இந்தச் சூழலில் யுவராஜ் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
முதல் இரண்டு போட்டிகளில் ஸ்டார்க் வேகத்திலும், கடைசிப் போட்டியில் ஆஷ்டன் அகர் சுழலிலும் அவர் தனது விக்கெட்டை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அவருக்கான வாய்ப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. வரும் ஐபிஎல் சீசனில் தனது மோசமான ஆட்டத்தை அவர் தொடர்ந்தால் இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போகும். இந்நிலையில், யுவராஜ் தனது ஆதரவை அவருக்கு கொடுத்துள்ளார்.
“ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தங்களது கரியரில் ஏற்ற, இறக்கங்களை எதிர்கொள்வர். நாம் அனைவருமே இதை ஏதேனும் ஒரு கட்டத்தில் எதிர்கொண்டு இருப்போம். சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் மிக முக்கிய வீரர் என நான் நம்புகிறேன். உலகக் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் முக்கிய பங்களிப்பை அவர் கொடுத்து அசத்துவார். நம் வீரர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். நம் சூர்யா நிச்சயம் எழுச்சி பெறுவார்” என யுவராஜ் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.