

இந்தூர்: கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க் வரவால் எங்கள் அணி பலம் பெற்றுள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருப்பதால் கோப்பையையும் இந்திய அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் 1-ம் தேதி இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இந்தூர் நகரில் தொடங்கவுள்ளது.
இதனிடையே, தாயின் உடல்நலக்குறைவு காரணமாக அவரைச் சந்திக்க, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். எனவே, அவர் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் அவருக்குப் பதிலாக ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (சிஏ) அறிவித்துள்ளது.
மேலும், இடது முழங்கையில் காயமடைந்துள்ள தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்காம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஆஸ்திரேலிய அணியிலிருந்து காயம் காரணமாக டேவிட் வார்னர் விலகியுள்ளார். மேலும் கேப்டன் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளதால் அவரால் 3-வது போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் அணியில் இல்லாதது பேரிழப்புதான். அவர்கள் இருவருமே உலகத் தரமான விளையாட்டு வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் இடத்தை நிரப்ப நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அவர்கள் 2 பேரும் இல்லாத நிலையிலும் ஆஸ்திரேலிய அணியால் எழுச்சி பெறமுடியும். அணிக்கு தற்போது கேமரூன் கிரீனும், மிட்செல் ஸ்டார்க்கும் திரும்பியுள்ளனர். அவர்களது வரவால் அணி பலம் பெற்றுள்ளது.
கம்மின்ஸ், வார்னர் இல்லாத நிலையிலும் இந்திய அணி வீரர்களின் சவாலை எங்களால் ஏற்க இயலும். இந்தூர், அகமதாபாத் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஏற்ற பயிற்சிகளை நாங்கள் பெற்று வருகிறோம். ஸ்டார்க்,கிரீன் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டுஅணிக்கு பெரிய பலமாக வந்து சேர்ந்துள்ளனர். எதிரணியை வீழ்த்த நாங்கள் வியூகம் வகுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.