Published : 20 Feb 2023 08:50 AM
Last Updated : 20 Feb 2023 08:50 AM
புதுடெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது சுழற்பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் சுருண்டது. இதைத் தொடர்ந்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தக்கவைத்தது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 262 ரன்களுக்கு வீழ்ந்தது.
பின்னர் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்றைய 3-ம் நாள் ஆட்டத்தை டிராவிஸ் ஹெட் 39, மார்னஷ் லபுஷேன் 16 ரன்களுடன் தொடங்கினர்.
டிராவிஸ் ஹெட் மேலும் 4 ரன்கள் சேர்த்த நிலையில் 43 ரன்களுக்கு அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து விளையாட வந்த ஸ்டீவன் ஸ்மித்தை 9 ரன்களிலும், ரென்ஷாவை 2 ரன்களிலும் பெவிலியனுக்கு அனுப்பினார் அஸ்வின்.
இதையடுத்து தனது மந்திர சுழற்பந்துவீச்சால் ஹேண்ட்ஸ்காம்ப் 0, அலெக்ஸ் கேரி 7, கம்மின்ஸ் 0, லயன் 8, குனேமன் 0 ஆகியோரது விக்கெட்களைச் சாய்த்தார் ரவீந்திர ஜடேஜா.
லபுஷேன் மட்டும் சற்று நிலைத்து விளையாடி 35 ரன்கள் எடுத்து ரவீந்திர ஜடேஜா பந்தில் போல்டானார். இறுதியில் அந்த அணி 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜா 7விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் ஒரு ரன்னில் வீழ்ந்தாலும் ரோஹித்துடன் இணைந்து இன்னிங்ஸை கட்டமைத்தார் சேதேஸ்வர் புஜாரா. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் ரோஹித் 31 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். பின்னர் வந்த விராட் கோலி 20 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 12 ரன்களும் எடுத்து வீழ்ந்தனர்.
5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரீகர் பரத்தும், புஜாராவும் இறுதி வரை நிலைத்து விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 26.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. புஜாரா 31 ரன்களும், கர் பரத் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. மேலும் பார்டர்-கவாஸ்கர் டிராபியையும் இந்திய அணி தக்கவைத்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களையும், 2-ம் இன்னிங்ஸில் 7 விக்கெட்களையும் கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
3 நாளிலேயே முடிந்த ஆட்டம்
முதல் டெஸ்ட் போட்டியைப் போலவே 2-வது டெஸ்ட் போட்டியும் 3 நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 177 ரன்களிலும், 2-ம் இன்னிங்ஸில் 91 ரன்களிலும் சுருண்டது. அதைப் போலவே 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஜடேஜா, அஸ்வின் சுழற்பந்துவீச்சுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் சுருண்டதால் 3-ம் நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT