

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நேற்று முதல் கேள்வி விளையாட்டுத்துறை தொடர்பானதாக இருந்தது. இந்த கேள்விக்கு பதிலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
திருப்பூர் தெற்கு தொகுதி உறுப்பினர் க.செல்வராஜ், திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய மைதானம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா? என கேட்டிருந்தார்.
இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘திருப்பூர் சிக்கண்ண அரசு கலைக்கல்லூரியில் 8 ஏக்கர் பரப்பில், ரூ.18 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. பார்வையாளர் மாடத்துடன் கூடிய, திறந்த வெளி விளையாட்டரங்கம், ஓடுதளம், உடற்பயிற்சிக்கூடம், கால்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து ஆடுகளம் அமைக்கப்படும். அதே போல், இந்த அரங்கத்தின் பணிகள் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 60% பணிகள் முடிந்துள்ளன. வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பார்வையாளர்கள் மாடம், 400 மீட்டர் ஓடுதளம் உள்ளிட்ட பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
தொடர்ந்து பேசிய க.செல்வராஜ், ‘‘திருப்பூர் மக்களின் கோரிக்கையை ஏற்று திறந்த வெளி விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டு வருவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பணிகள் எப்போது முடிந்து பயன்பாட்டுக்கு வரும். பணிகள் நிறைவடைந்ததும் அமைச்சராகிய தாங்களே நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும். தமிழகத்தில் அதிலும் சென்னையில் கருணாநிதி பெயரில் உலக கோப்பை கபடி போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘மைதானப் பணிகள் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும். கண்டிப்பாக நானே வந்து விளையாட்டு மைதானத்தை திறந்து வைக்கிறேன். விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் 44 -வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பாராட்டும்வகையில் நடத்திக் காட்டினோம். மேலும், தமிழகத்தில் முதல் முறையாக பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டிகள் கடந்தாண்டு நடத்தப்பட்டது. முதல்வரின் அறிவுறுத்தல் படி பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஜூன் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்படும். உலகக்கோப்பை கபடிப் போட்டிகளை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று தமிழகத்தில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.