

பியூனஸ் அயர்சில்: அர்ஜென்டினா அணியினரின் உலகக் கோப்பை வெற்றிப் பேரணியில் அந்த அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ், பிரான்ஸ் வீரர் எம்பாப்பே முகம் பதிந்த பொம்மையை வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் - அர்ஜென்டினா இடையேயான இறுதிப் போட்டியின் முதல் பாதியில் அர்ஜென்டினா முழு ஆதிக்கம் செலுத்திய நிலையில், இரண்டாம் பாதியில் பிரான்ஸின் நட்சத்திர வீரர் எம்பாப்பே கடைசி நிமிடங்களில் சிறப்பாக விளையாடி 3 -3 என்ற கோல் கணக்கில் போட்டியை சமன் செய்தார்.
எனினும் பெனால்டி ஷுட் அவுட்டில் அர்ஜென்டினா வென்றது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு ரசிகர்களின் பாராட்டுகள் எந்த அளவுக்கு குவிந்ததோ, அதே அளவிலான பாராட்டு எம்பாப்பேவுக்கும் கிடைத்தது. இந்த நிலையில்தான் அர்ஜென்டினா அணியின் வெற்றி பேரணியில் சர்ச்சைக்குரிய நிகழ்வு நடந்தேறியுள்ளது.
அர்ஜென்டினா அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில், தலைநகர் பியூனஸ் அயர்சில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. திறந்தவெளி பேருந்தில் அமர்ந்த அர்ஜென்டினா வீரர்கள் பொதுமக்களை நோக்கி கையசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே வெற்றி உலா வந்தனர்.
அப்போது, அந்த அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ், பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவின் முகம் (விரக்தி நிலையில் உள்ள முகபாவம்) பதித்த குழந்தை வடிவ பொம்மையை கையில் வைத்திருந்தார். அவரது இந்தச் செயலை சமூக வலைதளங்களில் பிரான்ஸ் ரசிகர்கள் உட்பட கால்பந்தாட்ட ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.