

கோவையில் நேற்று தொடங்கிய ஜூனியர் தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் 2.26 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார் டெல்லி மாணவர் தேஜஸ்வின் சங்கர்.
தமிழ்நாடு தடகளச் சங்கம் சார்பில் 32-வது தேசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கின. தமிழ்நாடு தடகளச் சங்கத் தலைவர் வால்டர் ஐ.தேவாரம் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
18 வயதுக்கு உட்பட்டோருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் டெல்லி மாணவர் தேஜஸ்வின் சங்கர் (17) 2.26 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனை படைத்தார். ஏற்கெனவே ஜூனியர் பிரிவில் 2011-ல் சசிதார் ஹர்ஷித் 2.17 மீட்டரும், சீனியர் பிரிவில் 2004-ல் ஹரிசங்கர் ராய் 2.25 மீட்டர் உயரம் தாண்டியதுமே சாதனையாக இருந்தது. மாணவர் தேஜஸ்வினின் தந்தை மதுரையைச் சேர்ந்தவர். எனினும் டெல்லியில் பிறந்த தேஜஸ்வின் சங்கர், அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இது குறித்து மாணவர் தேஜஸ்வின் சங்கர் கூறும்போது, “வழக்கமாக பயிற்சிகளில் நான் 2.10 மீட்டர் உயரத்தை சாதாரணமாக தாண்டுவேன். லக்னோவில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொது விளையாட்டுப் போட்டியில் 2.22 உயரம் தாண்டியிருந்தேன். எனினும், தற்போது 2.26 உயரம் தாண்டுவேன் என நினைக்க வேயில்லை. கடவுள் கிருபையால் இந்த சாதனை படைத்துள்ளேன். இது மேலும் என்னை சாதிக்க தூண்டியுள்ளது” என்றார்.
ஹரியானா ஆதிக்கம்
முதல் நாள் போட்டிகளில் ஹரியானா வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். முதல் நாள் போட்டிகளின் ஒட்டுமொத்த புள்ளிகள் பிரிவின் அடிப்படையில் ஹரியானா அணி 77 புள்ளிகளும், உத்தரப்பிரதேச அணி 48 புள்ளி களும், கேரள அணி 45 புள்ளி களும் பெற்று முதல் 3 இடங்களில் உள்ளன. தமிழக அணி 34 புள்ளி களுடன் 5-ம் இடத்தில் உள்ளது.