

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா ஆகிய 4 நாடுகள் கலந்துகொண்டுள்ள ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா நேற்று ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
இதில் உலகதரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆசிய சாம்பியனான இந்திய அணியை வீழ்த்தியது.
முதல் பாதியில் இந்திய அணிக்கு 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இதில் இரண்டு வீணடிக்கப்பட்ட நிலையில் 21-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை பயன்படுத்தி ரூபிந்தர்பால் சிங் கோலாக மாற்றினர். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
ஆனால் அடுத்த 3 நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜெர்மை ஹெவர்டு கோல் அடிக்க முதல் பாதியின் முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.
2-வது பாதி ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலிய அணி மேலும் இரு கோல்களை அடித்து அசத்தியது. 36-வது நிமிடத்தில் ஜெர்மை ஹெவர்டு தனது 2-வது கோலை அடித்தார். அடுத்த 7-வது நிமிடத்தில் டிரென்ட் மிட்டன் கோல் அடிக்க ஆஸ்திரேலிய அணி 3-1 என முன்னிலை பெற்றது.
கடுமையாக போராடிய இந்திய அணி 53-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. இந்த கோலையும் பெனால்டி கார்னர் மூலம் ரூபிந்தர் பால் சிங் அடித்தார். ஆனால் அதன் பிறகு ஆஸ்திரேலிய அணியின் தடுப்பு அரண்களை மீறி இந்திய வீரர்களால் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் மலேசியாவுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது.