

துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ரகானே தலைமையிலான மேற்கு மண்டல அணி 294 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.
துலீப் டிராபி இறுதிப் போட்டி கடந்த 21-ம் தேதி முதல் கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் மேற்கு மண்டல அணி 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தெற்கு மண்டல அணி 327 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கு மண்டல அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 265 ரன்கள், சர்பராஸ்கான் 127 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐய்யர் 71 ரன்கள், பஞ்சல் 40 ரன்கள் எடுத்ததால் நான்கு விக்கெட்களை மட்டுமே இழந்து அந்த அணி 585 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் தெற்குமண்டலத்தின் தொடக்க ஆட்டக்காரர் ரோகன் குன்னுமால் மட்டுமே அதிகபட்சமாக 93 ரன்களை எடுத்தார்.
அடுத்தடுத்து வந்த வீரர்கள் மாயங்க் அகர்வால் 14, விஹாரி 1, இந்திரஜித் 4, மனிஷ்பாண்டே 14 என சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் தெற்கு மண்டல அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இறுதிப் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தெற்கு மண்டல வீரர்கள் ரவிதேஜா மற்றும் சாய் கிஷோர் முதல் இரண்டு மணி நேரம் விக்கெட் இழக்காமல் எதிர்த்து போராடினர்.
இந்த ஜோடி 157 பந்துகளை எதிர்கொண்டு 57 ரன்களை எடுத்தனர். ரவிதேஜா ஒரு சிக்ஸர் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடித்தார்.
203 ரன்கள் எடுத்திருந்த போது மேற்கு மண்டல அணி வீரர் கஜா, கிஷோர் விக்கெட்டை வீழ்த்தினார். இதற்கு பின் களமிறங்கிய கவுதம், தேஜாவுடன் இணைந்து 23 ரன்கள் சேர்த்தனர். முலானி வீசிய பந்தில் ரவிதேஜா எல்பிடபிள்யூ முறையில் அவுட்ஆனார். அடுத்து களமிறங்கிய பசில்தாம்பி ‘டக் அவுட்’ ஆனார்.
இதையடுத்து 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கவுதம் ஆவுட் ஆனார். இதனால் 294 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு மண்டல அணி அபார வெற்றி பெற்று துலீப் டிராபியை கைப்பற்றியது.