Published : 22 Aug 2022 07:35 AM
Last Updated : 22 Aug 2022 07:35 AM

பந்துவீச்சாளர்களுக்கு கே.எல்.ராகுல் புகழாரம்

ஹராரே: ஜிம்பாப்வே, இந்தியா அணிகளிடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஒரு நாள் போட்டித் தொடரை வென்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் கூறியதாவது: 2-வது ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி ஜிம்பாப்வே வீரர்களைக் கட்டுக்குள் வைத்தனர். ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு கவுரவமாகும்.

எனவே அடுத்த முறையும் இங்கு வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். நாங்கள் எங்கு பயணம் செய்தாலும், இந்திய ரசிகர்களிடமிருந்து எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது, அவர்களின் ஆதரவுக்கு மிகவும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய சாதனை படைத்தார் தீபக் ஹூடா

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தீபக் ஹூடா புதிய சாதனை படைத்துள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் ஹராரேவில் நடைபெற்றது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் தீபக் ஹூடா 25 ரன்களைக் குவித்தார்.

மேலும் இந்தப் போட்டியில் ஆல்-ரவுண்டரான தீபக் ஹூடா ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஹூடா அறிமுகமான போட்டியில் இருந்து, அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்பதே அந்தச் சாதனையாகும்.

இந்தியாவுக்காக தொடர்ச்சியாக 16 போட்டிகளில் விளையாடியுள்ளார் ஹூடா. இந்த 16 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் ஹூடா தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அதில் இருந்து அவர் விளையாடிய ஏழு ஒருநாள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ருமேனியா நாட்டைச் சேர்ந்த சாத்விக் நடிகோட்லா என்ற வீரர் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து தொடர்ச்சியாக 15 போட்டிகளில் அவரது அணிவெற்றி பெற்றதே உலகசாதனையாக இருந்தது. அதனை தீபக் ஹூடா தற்போது முறியடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x