Published : 08 Aug 2022 02:27 PM
Last Updated : 08 Aug 2022 02:27 PM
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பரபரப்பாக விளையாடி வரும் அதே சமயத்தில் நேற்று காலை ஃபோர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டில் நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் இந்திய மகளிர் பி அணியின் நட்சத்திரமான நிறைமாத கர்ப்பிணி ஹரிகா துரோணவல்லி பங்கேற்று மரக்கன்றை நட்டார்.
யார் இந்த ஒலிவியா?
செஸ் ஒலிம்பியாட்டில் மகளிர் பிரிவில் போலந்து நாட்டைச் சேர்ந்த 22 வயதான கியோல்பாசா ஒலிவியாவின் அபார ஆட்டம் நேற்று 9-வது சுற்றிலும் தொடர்ந்தது. முதல் 8 சுற்றுகளில் வெற்றிகளை குவித்த அவர், நேற்று இந்திய ஏ அணியின் வைஷாலியையும் வீழ்த்தினார்.
போலந்தின் அகஸ்டோவ் நகரில் 2000-ல் பிறந்த ஒலிவியா போலந்தின் செஸ் வீராங்கனைகளில் முதன்மையானவர். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப்பில் 2-வது இடம் பிடித்தார். 2016-ம் ஆண்டு மகளிர் சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டம் வென்றார்.
செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில் பங்கேற்றுள்ள பரோ தீவுகளைச் சேர்ந்த் நீல்சன் ஹோக்னி எகில்ஸ்டாஃப்ட், பிரபல கால்பந்து வீரரான அர்ஜெண்டினாவின் நட்சத்திரமான லயோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகர் ஆவார். இதனால் அவர், விளையாடும் பிஎஸ்ஜி கால்பந்து அணியின் பெயர் பொறித்த டி-ஷர்ட்டுடன் செஸ் போட்டியில் பங்கேற்க வந்திருந்தார் நீல்சன் ஹோக்னி. இது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.
10 இடங்களுக்குள் வருவதே இலக்கு
ஓபன் பிரிவில் இந்திய சி அணிக்காக விளையாடி வரும் எஸ்.பி.சேதுராமன் கூறும்போது,“தொடக்க சுற்றுகளில் சிறப்பாக விளையாடினோம். அதனால் நடுவில் அந்த பார்மை தவற விட்டுவிட்டோம். பெரு அணிக்கு எதிராக தோல்வியடைந்தது ஏமாற்றமாக இருந்தது.
கடைசி இரு சுற்றுகளிலும் சிறப்பாக செயல்பட்டு முதல் 10 இடங்களுக்குள் இருக்க விரும்புகிறோம். தனிப்பட்ட வகையில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்துள்ளது. 9 ஆட்டங்களில் 7 புள்ளிகள் பெற்றுள்ளேன். இதற்கு முன்னர் 2 முறை ஒலிம்பியாட்டில் பங்கேற்ற போதிலும் இதுவே எனது சிறப்பான ஆட்டமாக உள்ளது. தோல்வியை சந்திக்கவில்லை " என்றார்.
வாய்ப்பு எப்படி?
ஓபன் பிரிவில் இந்தியா ஏ அணியில் விளையாடி வரும் சசிகிரண் கூறும்போது, “அர்மேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சில தடங்கல்களை சந்தித்தோம். அதன் பின்னர் உத்திகளை மாற்றி விளையாடி வருகிறோம்.
கடைசியாக நடைபெற உள்ள 2 சுற்றுகளில் வெற்றி பெற்றால் எங்களுக்கு வாய்ப்பு உள்ளது. பி அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
அவர்கள் எந்தவித அழுத்ததும் இல்லாமல் விளையாடி வருகின்றனர். அதேவேளையில் அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருந்தாலும் சொந்த நாட்டில் போட்டி நடைபெறும் போது அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகிறோம்.
ஃபிடேவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் பட்டம் 5 முறை வென்றுள்ளார். பொதுவாக நாங்கள் செஸ் தொடர்பாக அதிகம் பேசுவோம். நிர்வாக ரீதியாக அவர், சிறப்பாக செயல்படுவார்” என்றார்.
மகளிர் பிரிவில் விளையாட வந்த நமீபியா வீராங்கனையான லிஷன் தனது நாட்டுக்கொடியுடன் கொடுத்த உற்சாக போஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT