Last Updated : 31 Jul, 2022 11:38 AM

 

Published : 31 Jul 2022 11:38 AM
Last Updated : 31 Jul 2022 11:38 AM

செஸ் ஒலிம்பியாட் 2022 | 2-வது நாளிலும் இந்திய அணிகள் ஆதிக்கம்

எஸ் டோனியாவின் சுகவின் கிரில்லின் நகர்வுகளை உன்னிப்பாக கவனிக்கும் இந்திய பி அணி வீரர் பிரக்ஞானந்தா . | படங்கள்: எம். முத்துகணேஷ் |

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்திலும் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வெற்றி கண்டனர். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 2-வது நாளான நேற்று ஓபன் பிரிவில் இந்திய ஏ அணியானது மால்டோவாவை எதிர்த்து விளையாடியது.

இந்திய ஏ அணியில் ஹரிகிருஷ்ணா பென்டலா, அர்ஜுன் எரிகைசி, எஸ்.எல்.நாராயணன், சசிகிரண் ஆகியோர் இடம் பெற்றனர். விதித் குஜராத்திக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹரி கிருஷ்ணா, ஷிட்கோ இவானை எதிர்த்து விளையாடினார்.

இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹரி கிருஷ்ணா வெற்றி பெற்றார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி, மகோவி அன்ட்ரிக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். இதனால் இருவருக்கும் பாதி புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. ஹமிடெவிச் விளாடிமிருக்கு எதிரான ஆட்டத்தில் எஸ்.எல்.நாராயணன் வெற்றி கண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய சசிகிரண், யுலியன் பால்டாக்கை சாய்த்தார்.

உருகுவே வீரர் ஜார்ஜ் மேயருக்கு எதிரான ஆட்டத்ததை உன்னிப்பாக
கவனிக்கும் உலக சாம்பியனான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் .

இதையடுத்து இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி கண்டது. இந்திய பி அணியானது 4-0 என்ற கணக்கில் எஸ்டோனியாவை வீழ்த்தியது. இந்திய பி அணியில் நிகில் சரினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனால் பிரக்ஞானந்தா களமிறங்கினார். இந்த பிரிவில் டி.குகேஷ், கீக் கல்லேவையும், பிரக்ஞானந்தா, சுகவின் கிரில்லையும் அதிபன், வோலோடின் அலெக் சாண்டரரையும், ரவுனக் சத்வானி, ஷிஸ்கோவ் அன்ட்ரியையும் தோற்கடித்தனர்.

இந்திய சி அணியானது மெக்சி கோவை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி சார்பில் சூர்யசேகர் கங்குலி, எஸ்.பி.சேது
ராமன், அபிஜீத் குப்தா, கார்த்திகேயன் முரளி களமிறங்கினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய சூர்யசேகர் கங்குலி, ஹெர்னாண்டஸ் குரேரோ கில்பர்டோவுடன் டிரா செய்தார்.எஸ்.பி.சேதுராமன், இப்ரா ஷமி லூயிஸ் பெர்னாண்டோ இடையிலான ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது.

கார்த்திகேயன் முரளி, கபோ விடல் யூரியலை தோற்கடித்தார். அபிஜீத் குப்தா, டயஸ் ரோசாஸ் ஜூலியோ சீசர் ஆகியோர் இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இந்திய அணி 2.5 – 1.5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி தனது 2வது ஆட்டத்தில் நேற்று அர்ஜெண்டினாவை சந்தித்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய கோனேரு ஹம்பி, சூரியல் மரிஷாவிற்கு எதிரான ஆட்டத்தை 44-வது நகர்வின் போது டிரா செய்தார். இதனால் இருவருக்கும் பாதி புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

உடலில் வித்தியாசமான டாட்டூக்களுடன் போட்டியை
காண வந்த வெளிநாட்டு ரசிகை.

கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆர்.வைஷாலி, காம்போஸ் மரியா ஜோஸையும் தானியா சச்தேவ், போர்டா ரோடாஸ் அனபோலாவையும், குல்கர்னி பக்தி, சர்கிஸ் மரியா பெலனையும் தோற்கடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 3.5-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. இந்திய பி அணி, லாத்வியாவை எதிர்கொண்டது. இதில் வந்திகா அகர்வால், ரோகுல் லாராவையும் வீழ்த்தினார். பத்மினி ரவுத், பெர்ஸினாவுக்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தார். இதனால் இவருக்கும் பாதி புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதேவேளையில் சவுமியா சாமிநாதன், டெர்-அவெடிஸ்ஜானா அக்னேசா ஸ்டெபானியாவையும், மேரி அன் கோம்ஸ், மக்லகோவா நெல்லிஜாவையும் வீழ்த்தினர். இதனால் இந்திய அணி 3.5 – 0.5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய சி அணி, சிங்கப்பூரை எதிர்த்து விளையாடியது. இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஈஷா கர்வாடே 34-வது நகர்வின் போது கெகே ஏஞ்சலாவை தோற்கடித்தார். இதேபோன்று நந்திதா, மெய்-இன்-இம்மானு லேவை வீழ்த்தினார்.

பிரத்யுஷா போடா, லியு யாங் ஹேசலுக்கு எதிரான ஆட்டத்தையும், விஷ்வா வஸ்னாவாலா, ஃபாங் குன்னுக்கு எதிரான ஆட்டத்தையும் டிராவில் முடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் சிங்கப்பூரை தோற்கடித்தது. நேற்றைய ஆட்டத்தில் ஓபன் பிரிவில் இந்திய அணியினர் 8 வெற்றிகளையும், 4 டிராக்களையும் பதிவு செய்தனர். மகளிர் பிரிவில் இந்திய அணியினர் 8 வெற்றியையும், 4 டிராக்களையும் பெற்றனர்.

உலக சாம்பியனுக்கு வெற்றி

ஓபன் பிரிவில் உலக சாம்பியனும் முதல் நிலை வீரருமான மேக்னஸ் கார்ல்சனை உள்ளடக்கிய நார்வே அணி, உருகுவேவை எதிர்த்து விளையாடியது.

இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய கார்ல்சன், உருகுவே வீரர் மேயர் ஜார்ஜை தோற்கடித்தார்.

அதேபோல் நார்வே அணியின் வீரர் தரி ஆர்யன், கிறிஸ்டியான்சென் ஜோஹன்-செபாஸ்டியன் ஆகியோரும் எதிரணி வீரர்களை வீழ்த்தி வெற்றியைச் சுவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x