Published : 30 Jul 2022 12:38 AM
Last Updated : 30 Jul 2022 12:38 AM

IND vs WI | ஸ்பின்னர்ஸ் + அட்டாக்கிங் பவுலிங் - 68 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இந்தியா

தரூபா (Tarouba): மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 68 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இந்தியா.

191 ரன்கள் இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கைல் மேயர்ஸ் முதல் ஓவரிலேயே அதிரடியான துவக்கம் கொடுத்தார். புவனேஷ்வர் குமார் ஓவரில் 11 ரன்கள் எடுத்தார். அடுத்துவந்த அர்ஷ்தீப் சிங்கின் ஓவரிலும் பவுண்டரி அடித்தார். என்றாலும் மூன்றாவது பந்திலேயே அவரை 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக்கினார் அர்ஷ்தீப். வழக்கமாக நடு வரிசையில் இறங்கும் ஜேசன் ஹோல்டர் இன்று ஒன் டவுனாக இறங்கினார். அவரை அடுத்த ஓவரிலேயே ஜடேஜா டக் அவுட் செய்தார்.

ஷமர் ப்ரூக்ஸ் மற்றும் பூரான் இருவரும் சிறிதுநேரம் தாக்குபிடித்தனர். ஆனால், புவனேஷ்வர் அபார பந்துவீச்சால் 20 ரன்கள் எடுத்திருந்த ப்ரூக்ஸை கிளீன் போல்டக்கினார். கேப்டன் பூரானை அஸ்வின் வெளியேற்றினார். அடுத்தடுத்து ஒரு சில ஓவர்கள் இடைவெளியில் இந்திய பவுலிங் யூனிட் மேற்கிந்திய தீவுகள் வீரர்களை அவுட் செய்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், அஸ்வின், பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1 - 0 முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா இன்னிங்ஸ்: டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து இந்திய அணி பேட் செய்தது. இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். முதல் விக்கெட்டிற்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சூர்யகுமார் 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ரிஷப் பந்த், 14 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹர்திக், 1 ரன் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் நிலைத்து ஆடிய ரோகித், 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.

ஜடேஜா, 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து அஸ்வின் உடன் இணைந்து விளையாடினார் தினேஷ் கார்த்திக். 19 பந்துகளில் 41 ரன்களை சேர்த்து அசத்தினார் டிகே. 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் இதில் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 215.79. அஸ்வின் உடன் 52 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பும் அமைத்தார் டிகே.

அதன் பலனாக இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணிகள் சார்பில் அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மெக்காய், ஹோல்டர் மற்றும் ஹுசைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x